
இலங்கை பிரச்சினை பற்றி இந்திய தமிழர்கள் பேசுவது கூட குற்றமாகும் என்ற பிம்பத்தை சீமானும் திருமாவும் உடைத்தெறிந்த பிறகு இந்திய தேசியம் - சிங்கள இனவெறி - தமிழ் ஈழம் பற்றியதான என்னுடைய எண்ணங்களை பதிவு செய்யவே இந்த கட்டுரை...
இன்றைக்கு சந்தித்த ஈழ தமிழ் நன்பர் ஒருவரின் பார்வையும் அவர் கூறிய கருத்துக்களும் இந்த கட்டுரையை எழுத மேலும் ஊக்கம் தந்தது...
அவருடைய எண்ணங்களில், விடுதலைப்புலிகள் இலங்கையில் அரசியல் தீர்வை எட்ட அவர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள் என்பதேயாகும்...
புலிகளுக்கு கிடைத்த வாய்ப்புகள் என்ன ?
புலிகளுக்கும் அதன் தலைவர் வே பிரபாகரன் அவர்களுக்கும் இந்தியா முன்வைத்த தீர்வுத்திட்டம், மாநில சுயாட்சி போன்றதொரு அரசு.

இன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...
அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...
ஆனால் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக அதில் கலந்துகொண்ட திரு.பண்ரூட்டி ராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார்...அவரிடம் கேட்டால் அவர் சொல்லக்கூடும்...அங்கே என்ன பேசினார்கள் என்று ? பத்திரிகையாளர்கள் யாராவது அவரிடம் கேட்டு வெளியிடுங்களேன்..

கிட்டத்தட்ட ஜெயவர்த்தனேயை ஒரு மிரட்டு மிரட்டித்தான் ராஜீவ் அவர்கள் இந்த உடன்படிக்கைக்கு உடன்பட வைத்தார்...சிங்களருக்கோ - தமிழர்களுக்கு தனி நாடு அல்ல, தனி கூடு கூட உருவாவதை ஏற்றுக்கொள்ளாத மனோ நிலைதான் அன்றைக்கு இருந்தது...

அதனால் தான், அப்படிப்பட்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்த திரு.இராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையை திருப்பி அடித்த ராணுவ வீரன் ஹீரோ அளவுக்கு சிங்கள இனவாதிகளால் பார்க்கப்பட்டான்..

இந்திய தேசியத்தின் திட்டம் என்ன ?
இந்திய தேசியம் ஏன் அவ்வாறான திட்டத்தை முன்மொழிந்தது ? அந்த திட்டத்தை எப்படி சிங்களர்கள் ஏற்றுக்கொண்டார்கள் ? கொஞ்சம் பார்ப்போம்...
மொழியால் இனத்தால் வேறுபட்டவர்களை இந்திய தேசியம் மற்றும் ஒருமைப்பாடு என்று கட்டி வைத்து ஆட்சி செய்வது போல நீங்களும் தமிழர்களை இறுதிவரை ஆளலாம் என்று ஜெயவர்த்தனே கன்வின்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்...
தமிழ் ஈழம் என்ற சொல்லாடலை ஏன் இந்தியா ரசிக்கவில்லை ? தமிழருக்கு தனி நாடு உருவாகிவிடுவதை ஏன் இந்தியா அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் மிக எளிது.
ருஷ்யா என்ற நாடு (அல்லது ரஷ்யா, நான் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்த, 1985 ஆம் ஆண்டு வாக்கில் என்னுடைய தந்தையாரின் முயற்சியால் நான் ஒவ்வொரு மாதமும் வாசித்த யுனெஸ்கோ கூரியர் என்ற புத்தகத்தில் இப்படித்தான் எழுதுவார்கள்) உடைந்து சிதறிப்போனதை பார்த்தபிறகும் இந்தியா அப்படி ஒரு ஆபத்தான முயற்சியை ஆதரிக்குமா ?

பழைய உடையாத யூ எஸ் எஸ் ஆர்

இப்போதுள்ள ரஷ்யா
ஆக இந்தியா தனி ஈழக்கோரிக்கையை ஒரு காலத்திலும் ஆதரிக்கப்போவதில்லை...
கணிப்பொறி மொழியில் இதை DeadLock என்போம்...கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போன்ற விடை தெரியாத கேள்வி.
ராஜீவ் காந்தி ஏன் கொல்லப்பட்டார் ?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பார்த்தால், IPKF தமிழ் பெண்களை கற்பழித்தது போன்ற பல விடயங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர்களுக்கான தனி நாடு கொள்கையை எதிர்த்தவர்கள் எல்லாரும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்கள்...
அதில் ராஜீவும் ஒருவர் என்பதே நிஜம். அமிர்தலிங்கத்தில் இருந்து பத்மநாபா வரை, சிங்களத்தின் குறைந்தபட்ச அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களை புலிகள் வேரறுத்தார்கள்...
தமிழகத்தில் நடந்தது என்ன ?
தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறுபதுகளில் எழுப்பிய அண்ணா, தேர்தல் அரசியலுக்காகவும், மைய அரசில் இருந்து வந்த குடைச்சலாலும், அந்த கொள்கையை தூர எறிந்துவிட்டு ஆட்சியை பிடிக்கவில்லையா ?
அண்ணா கொள்கையை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லையா ?
அது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்..
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிறகு இந்தியாவின் நிலையை உற்று கவனிக்க தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..
குறைந்த பட்சம் இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் நார்வே அரசு மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்...
கிடைத்தவரை லாபம் என்று தமிழீழத்தின் முதல்வராக அமர்ந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் ?
அண்ணா காம்ப்ரமைஸ் செய்துகொண்டதைப்போல பிரபாகரனும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டிக்கவேண்டும்.
அதன்பிறகு தேர்தல் அரசியல் மூலம் சிங்கள மத்திய அரசை ஆட்டிவைத்திருக்கலாம். இன்றைக்கு இந்திய மத்திய அரசில் எத்தனை தமிழர்கள் ? தகவல் தொடர்பு, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, நிதி என்று எங்கே எல்லாம் அமர்ந்துவிட்டார்கள் ?
அப்படி இருந்திருந்தால் இன்றைக்கு மக்கள் மீது குண்டுகளை பொழிந்து ஆற்றொணா துயரத்துக்கு ஆளாகும் அவல நிலையை தவிர்த்திருக்கலாம்...
சர்வதேச ஈழத்தமிழ் சமூகம் என்ன செய்கிறது ?
தினமும் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் எல்லாம் பரந்து வாழும் ஈழ தமிழ் சமூகம், இப்போது பொருள் ஈட்டுவது, வீடு வாங்குவது, மகிழ்வுந்தில் வலம் வருவது போன்ற சுயநல போக்குகளிலும், கேளிக்கைகளிலும் நாட்டத்தை செலுத்துகிறது...
பொறுப்பாளர்கள் சொல்லும் ஒன்றுகூடல்களில் திரளக்கூட நேரமில்லை...அய்யோ...அலுவலகத்தில் அதிக வேலை...என்று சலித்துக்கொள்கிறது ஈழ தமிழ் சமூகம்...அங்கே சேட்டிங் தான் செய்யப்போகிறார்கள் என்பது வேறு விடயம்...
பத்தாண்டுகளுக்கு முன்னால் தாய்க்கு அனுப்பவேண்டிய பணத்தை புலிகளுக்கு அனுப்பியவர்கள் இன்றைக்கு டிஸ்கொத்தேவுக்கு செலவழிக்கவும், செண்டு பாட்டில் வாங்கவும், உயர்தர சோபா செட் வாங்கவும் செலவழிக்கிறார்கள்...
இதற்கு இரண்டு காரணமிருக்கலாம்...ஒன்று முல்லைத்தீவில் அவர்களது உறவினர் யாரும் இல்லாமலிருக்கலாம்...அல்லது வலித்து வலித்து மரத்துப்போயிருக்கலாம்...வலி என்பதே மறந்துபோயிருக்கலாம்...
இப்போது என்ன தீர்வு ?
இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் சிங்கள இனவெறியர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது மிக கடினம்.
படிப்படியாக ஈட்டும் வெற்றிகள் - நூற்றுக்கு பத்து பேர் உயிரிழந்தால் கூட, சிங்கள இனவெறி ராணுவத்துக்கு பயத்தை விதைக்கவில்லை...
மாறாக சர்வதேசங்களும் வழங்கும் ஆயுதங்களுடன் இன்னும் கொலைவெறியோடு மூளைச்சலவை செய்யப்பட்ட பிசாசுகளாக, ஆயுதங்களோடு நிற்கும் விடுதலை புலிகளிடம் மட்டுமல்ல மக்கள், ஆடுகள், மாடுகள், பள்ளிகள், ஆலயங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்துகிறார்கள்...
மாசேதுங்கின் ராணுவத்திடமும், வியட்நாமிய மக்களிடமும் சர்வதேசங்கள் நல்ல பாடங்களை பெற்றுவிட்டன...
அதனால் முதலில் குண்டுகளை வீசி அனைவரையும் அழித்துவிட்டு, அல்லது உள ரீதியான அவர்களின் மனோபலத்தை சிதைத்துவிட்டே, உள்ளே வருகிறார்கள்...
இப்போதைக்கு புலிகள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்...
மொத்த பலத்தையும் திரட்டி மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீழ்த்தவேண்டும், அல்லது வீழவேண்டும்...
இதில் எது நடந்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசை தூசி தட்டப்படும்...
பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தால் என்ன செய்யவேண்டும் ?
அதில் புலிகள் இருந்தால் இந்த முறை அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிடுங்கள்...பிடிவாதத்தை கைவிட்டுவிடுங்கள் பிரபாகரன் அவர்களே...
அதன்பிறகு மாநிலத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் சமூகம் பார்த்துக்கொள்ளும்...
அந்த பேச்சுவார்த்தை மேசையில் ஆனந்த சங்கரியும் டக்ளஸ் தேவானந்தாவும், போனாப்போகுது என்று மனோ கனேசனும் இருந்தால், அப்போதும் ஒரு அரசியல் தீர்வு திணிக்கப்படும்...
அதை பெற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே...அதன் பிறகு இலங்கைதீவை சொர்க்கபுரியாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மாற்றுவார்கள்...
******
*****
****
***
**
*