நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன ? நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...
தம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா ? தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா ? இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...
கஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...
நமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட தான் சுத்துவேன்...சுத்துறதுக்கு பெரிய பெரிய இடமெல்லாம் கிடையாது எங்க ஏரியாவில...மொத்தமே நாலுதெரு...அதுல நடுவுல பஸ்ஸ்டாண்டு...அப்புறம் கடைத்தெரு...கபிலர் குன்று கோயிலு...தென்பெண்ணை ஆத்துல முருகம்பாற...உலகளந்த பெருமாள் கோயிலு..கேள்ஸ் ஐஸ்கூல்...பஸ்டாண்டை ஒட்டி பாய்ஸ் ஐஸ்கூல்...தெப்பக்குளம்...தபோவனத்து நீச்சல் கொளம் ( கிணறுதான்) அவ்ளோதான்...
வெள்ளிக்கிழமை ராத்திரி வந்திட்டேன்...நைட்டு வீட்ல சாப்ட்டு படுத்திட்டேன்..காலையில் ஏந்திரிச்சவுடனே ( ஒம்போது மணிக்கு) பெரிமா வீட்டுக்கு போனை போட்டேன்...பெரிமா, எங்கே அது...(வீட்ல தலைவருக்கு பயங்கர மரியாதைன்னு வெச்சிக்கங்களேன்)...அதுவா...காலையில ஏந்திரிச்சி முடிவெட்றேன்னு ஒரு இருவது ரூபாய வாங்கிக்கினு போச்சு...என்னா விஷயம் ? ......அப்படீன்னாங்க... ஒன்னுமில்ல பெரிமா சும்மாத்தான்...சரி பெரிமா நான் போனை வெச்சிடறேன்...
இவனுக்கு வீட்ல காச வாங்கறதுக்கு இத விட வேற ஐடியாவே கிடைக்காதே...என்று மனசுல நினைச்சிக்கிட்டே...எங்கே இருப்பான் இவன்....கழுதை கெட்டா குட்டிச்செவுரு...கோபு காலையில கிளம்பிட்டா அங்கவை சங்கவை பெண்கள் பள்ளி காம்பவுண்டு...அத்தை வீட்டு டீவிஎஸ் பிப்டியை எடுத்துக்கிட்டு ஒரு அழுத்து...வழக்கம்போல நாய் அங்கேதான் இருந்தது...என்னை பார்த்ததும் வாயெல்லாம் பல்லு...ஹி ஹி என்று இளித்தது...காரணம் இது "பச்சை பாவாடையில் வரவும்" என்று ஒரு ஸ்கூல் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்த காலம் அது...
நலம் எல்லாம் விசாரித்து முடிந்த பிறகு, என்னடா...என்ன செய்யலாம்...என்று கேட்டபோது, கஞ்சா அடிக்கும் தன் முற்போக்கு திட்டத்தை முன்வைத்தது பன்றி கோபு...(குண்டாயிருக்கறதால பன்றி என்று பாசமுடன் அழைப்பது வழக்கம்)..அறகண்ட நல்லூர் (சங்க காலத்தில் அறம் கண்ட நல்லூர் - ஒரு ராஜா சாமியார் வேசம் போட்டுக்கிட்டு அவனை கொல்ல வந்தவனை மன்னிச்சி ஊருக்கு வெளிய உட்டுட்டு வரச்சொன்ன எடமாம்..தத்தன், முத்தநாதன் அப்படீன்னு பேரெல்லாம் ஸ்கூல் புக்ல வருமே...ராஜா பேரு மறந்திருச்சி...) ரயில்வே ஸ்டேஷன் போகலாம் என்பது தான் பிளான்...அதுக்கு முன்னாடி சைலோம் அருகில் பத்து ரூபாய்க்கு கஞ்சா பொட்லம் வாங்குவது...பிறகு சாதா சிகரட் ஒரு அரை பாக்கெட் வாங்கி அதில் போட்டு இழுப்பது...
குறு குறு என்று இருந்தது...தான் கஞ்சா குடிப்பதில் கின்னஸ் சாதனை செய்தது போல ஒரு கம்பீர பார்வை பார்த்தான் கோபு....டிவிஎஸ் பிப்டி மின்னல் வேகத்தில் பறக்க, சைலோம் அருகே வண்டியை நிறுத்தி ஒரு தம் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக பத்து ரூபா கொடுத்து வாங்கிய பொட்டலத்தை கைலிக்குள் போட்டுக்கொண்டு, எடு எடு எடு வண்டியை என்று நாட்டாமை சரத்குமார் ஸ்டைலில் துள்ளினான் கோபு...
விரைவாக ரயில்வே ஸ்டேஷன்...சாதா கோல்டு பிளாக் முன்பே வாங்கியாச்சு...ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே ரயில் வரும் மாநிலத்திலேயே சிறந்த ஸ்டேஷன்..."பயனிகளின் உடன் வருபவர்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கி செல்லவும்" என்று ஒக்கே ஒக்க போர்டு...இங்கிட்டு ஒரே ஒரு ப்ளாட்பார்மை வெச்சிக்கினு இந்த நாயிங்களோட அளும்ப பாருடா என்று திருச்சி பாசையில் ஒரு தெறிப்பு...
கஞ்சா இலை பொட்டலமாக வரும்...பத்து ரூபாய்க்கு ஒரு 50 கிராம் இலை இருந்தால் அதிகம்..அதை கையில் எடுத்து கொஞ்சம் கசக்கி, சாதா கோல்டு பிளாக் சிகரெட்டில் ( பஞ்சு வைக்காத சிகரெட்) இருக்கும் புகையிலையை கொஞ்சம் எடுத்துவிட்டு அதில் உள்ளே அடைத்து, மீண்டும் புகையிலையை வைத்து மூடி பத்தவெச்சு இழுக்க வேண்டியதுதான்...
ஆளுக்கு ஒரு சிகிரெட்டு தயாரித்தான் கோபு...ஏதோ பி.ஹெச்.டி வாங்கியவன் போல கையில் வைத்து உருட்டி நெளித்து இலையை அருமையான துகள்களாக மாற்றி சிகரெட்டில் அடைத்தான்...
காலை பதினோரு மணி இருக்கும் அப்போது...ப்ளாட்பார்ம் அருகில் வேப்ப மரத்து நிழலில் இருந்த மர பெஞ்சில் கஞ்சா பயணத்தை ஆரம்பித்து, கஞ்சா குடிக்கி என்ற பட்டத்தை பெறும் வேளை...
ஒரு நாலு இழுப்பு...லைட்டா தலை சுத்துது...கோபுவுக்கும் தான்.....அவன் அதிக கஞ்சாவை சுயநலத்தோடு அடைச்சிக்கிட்டான் போலிருக்கு...பய அப்படியே பெஞ்சில சாயறான்...நான் இன்னோரு இழுப்பு இழுத்துக்கிட்டே நாங்க நிறுத்தின டி.வி.எஸ் பிப்டி பக்கம் கழுத்தை சாச்சு வண்டி இருக்கான்னு பாக்கறேன்...கண்ணுல பட்டாம் பூச்சி பறக்குது...
டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...
தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....
எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...
தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...
பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...
விஷயம் என்னன்னா ட்ரெயின் மிக அருகில் வந்துவிட்டது...நான் கோபுவை இழுக்கும்போது ட்ரெயின் கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரத்தில் இருக்கு...அதுதான் ரயில் ஓசை மண்டைக்குள் ஒலித்தமாதிரி ஒரு ப்ரமையை ஏற்ப்படுத்த காரணம்...ஸ்டேஷன் இன்சார்ஜ் யாரும் இல்லை, காரணம் தெரியவில்லை...
ஒரு வழியாக அவனை இழுத்துவந்து பெஞ்சில் படுக்க வைத்து, நானும் படுத்து தூங்கி, எழுந்தோம்...டிவி.எஸ் வண்டி அப்படியே இருந்தது...அடி பம்பில் தண்ணி அடித்து முகம் கழுவி, அவன் மூஞ்சியில் கொஞ்சம் ஊத்தி எழுப்பி இழுத்துவந்து வண்டியில் ஏறு டா என்றேன்...
அவன் கொஞ்சம் தெளிவாகியிருந்தான்...
என்னை பார்த்து சொன்னான்....
பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...
நான் வண்டியை நிறுத்தி, திரும்பி, எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன்...