ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவேண்டும்.
அதற்கு முன் ஒரு சம்பவம்.
நார்வே வந்த புதிதில், இங்கே மெக்டொனால்ட்ஸில் சந்தித்த ஒரு 65 வயது நார்வேஜியன் பெண்மணி, ஜூலி, இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா ? எனக்கு முப்பது வயதில் இந்திய மகள் இருக்கிறார் என்று என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

திருமதி ஜூலி
அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் பூனே சென்றபோது, அங்கிருந்த சூழ்நிலையில், ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்துவந்துள்ளார்.
அவருக்கு இருந்த முன்று ஆண் பிள்ளைகளுடன் இந்த குழந்தையும் சேர்ந்து வளர்ந்து, இன்றைக்கு நார்வே ஓஸ்லோவில் வாழ்கிறார் இவர். நார்வே அரசியலில் குறிப்பிடத்தகுந்த இடத்திலும் இருக்கிறார்.
அவரிடம் கேட்டேன். உங்கள் மற்ற மூன்று பிள்ளைகள் திடீரென வந்து சேர்ந்த இந்த குழந்தையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று.
ஆரம்பத்தில் இந்த குழந்தை தத்தி நடப்பதை, தங்கள் அறைக்குள் வருவதை, தங்கள் பொருட்களை தொடுவதை மற்ற பிள்ளைகள் விரும்பவில்லையாம். அதன் பிறகு படிப்படியாக தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களாம்.
இன்றைக்கும் தன்னுடைய தாயை, மற்ற பிள்ளைகளை விட நுணுக்கமாக, அழகாக, வாரம் ஒருமுறை வந்து சந்திப்பதும், வேண்டிய அனைத்தையும் செய்வதும், அற்புதமானதாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் உள்ள ஒரு படத்தில் முழுகுடும்பமும் மகிழ்ச்சியோடு நிற்கும் ஒரு படம். ஆஹா. அற்புதம்.
கம்மிங் பேக் டு த பாய்ண்ட்.
கவிதா ஒரு பதிவு எழுதியிருந்தார். ஒரு குழந்தையை தத்தெடுப்பதை பற்றி எழுதியிருந்தார். தத்தெடுக்கப்பட்ட குழந்தை, மன ரீதியில் பின்னடைவை சந்தித்த கதை ஒன்றையும், பொருளாதார ரீதியில் குழந்தையை தத்தெடுத்த குடும்பம் கஷ்டப்படுவதையும் பற்றி. சுட்டி தாருங்களேன்.
அவர் அதில் தீர்வாக சொல்லியிருந்தது, ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட்டுவிட்டு, ஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு சப்போர்ட் செய்யுங்காள் என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் இல்லை ? தத்தெடுத்தல் என்பது, குடும்பம் இல்லாத ஒரு குழந்தைக்கு ஒரு குடும்பத்தை தருவதேயாகும். அதற்காகத்தான் அந்த பிள்ளைகள் ஏங்கும். பள்ளியில் படிக்க அல்ல. ஒரு தாயையும் தந்தையையும், ஒரு இல்லம் தந்துவிடமுடியாது.
இப்போது ஈழத்திலே ஏராளமான குழந்தைகள் தாய், தகப்பன் இரண்டு பேரையும் இழந்து நிற்கின்றனர். சுனாமி சமயத்தில் தத்தெடுப்பது குறித்து படித்த பெயரிலியின் இந்த பதிவை இந்த சூழ்நிலையோடு கண்டிப்பாக பொறுத்தி பார்க்கலாம்.
வேறு ஒரு பதிவில், தத்து எடுக்க விரும்பும் தம்பதியினர், திருமணம் ஆகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கழிந்திருக்கவேண்டும், மேலும் தாசில்தார், மணியகாரர், முக்கு தெரு டீக்கடைக்காரர் என்று எல்லோரிடமும் சர்ட்டிபிக்கேட் வாங்கிவரவேண்டும் என்று ஆயிரத்தெட்டு விதிமுறைகளை சொல்லியிருந்தார்கள். இந்த சான்றிதழ்களை எல்லாம் வாங்கிவருவதற்குள், நான் தத்தெடுக்க நினைக்கும் குழந்தை வளர்ந்து பெரியவளா(னா)கி, தானே இன்னும் ரெண்டு குழந்தைகளை தத்தெடுக்க விண்ணப்பித்திருக்கும்.
ஹிந்து தத்தெடுப்பு சட்டம் பற்றிய ஓட்டு எடுப்பும் மென் புத்தகமும் பற்றிய தரவுகளும் இணையத்தில் பார்த்தேன்.
இது இந்தியாவில் பிறந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா, அல்லது என்னைப்போன்ற கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்துமா ? அப்படி ஹிந்துக்களுக்கு பொருந்தும் எனில் என்னைப்போல மத கலப்பு மணம் செய்தவர்களுக்கு பொருந்துமா ? என்னுடைய மனைவி பெயரில் எடுக்கமுடியுமா ?
என்னை பொறுத்தவரை, சட்டரீதியான உரிமைகளுடன் தத்தெடுக்கவே விரும்புகிறேன். அதாவது என்னுடைய தத்து பிள்ளைகளுக்கும், என்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் முழு உரிமையை தர விரும்புகிறேன். (என்னுடைய மகள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கமாட்டாள் என்று நம்புகிறேன், அவளுக்கு ஆரஞ்சு பழம்தான் பிடிக்கும்)
என்னுடைய மனைவி இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், அது முழுமையான சம்மதமாக இருக்குமா, அல்லது ஒரு பெண்ணாக அவள் சந்திக்கப்போகும் உளவியல் பிரச்சினைகள் என்ன என்று எதுவும் புரியவில்லை.
விவாதிக்கலாமா ?







