பயோ டிஸ்க் - அடுத்த MLM காந்தபடுக்கை மோசடிAmezcua Bio Disc - தயாரிப்பது க்வெஸ்ட் நெட் என்ற நிறுவனம், இந்த பயோ டிஸ்க் உபயோகப்படுத்தி வாட்டரை (குடிநீர்) எனர்ஜைஸ் செய்வதை டெமோ காட்டுகிறோம் என்று அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு தமிழ் பேமிலி அழைத்து நாங்கக் போனோம்.


வாட்டர் ரீசைக்கிளிங் ப்ளாண்ட் என்பது ஏதோ பெரிசாக இருக்கும் (35 ஆயிரம் விலையாம்) என்று நினைத்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பா, அதில் ஒரு சிறிய மோட்டர். வட்ட வடிவத்தில் ஒரு கண்ணாடி. கைப்பிடியை கழட்டிய பெரிதாக்கும் ஆடி (ஜூமிங் லென்ஸு) மாதிரி இருந்தது. சுவிட்சை போட்டால் மோட்டர் இயங்கி, தண்ணீரை லென்ஸு மேல் ஊற்றுகிறது. (அதுக்கு தனியாக ஒரு ஸ்டேண்ட்). லென்ஸில் பட்டு தண்ணீர் மீண்டும் ப்ளாஸ்டிக் பட்டாவிலேயே ஊற்றிவிடுகிறது. இது போல ஆறு முறை தண்ணீரை எனர்ஜைஸ் செய்தால் அந்த தண்ணீர் மிகச்சிறந்த தண்ணீரா மாறிவிடும் என்றார்கள்.

நான் பார்த்த ப்ளாண்டை பெயிண்ட் ப்ரஷ் உதவியுடன் வரைந்திருக்கிறேன். (படம் சிறப்பாக வர நான் ஒன்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா அல்ல, ஏதோ என்னால் முடிந்தவரை கோடுகளை இழுத்து விட்டிருக்கிறேன்)

இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களாக அவர்கள் சொல்லியவை

- அந்த தண்ணீரை குடித்தால் நாட்பட்ட நோய்கள், டயபட்டீஸ், இதய நோய் எல்லாம் ஓடிவிடும்.
- சாதாரண சளி, சுரம் போன்ற நோய்கள் குடும்பத்தில் இருக்கவே இருக்காது
- சாதாரணமாக இருக்கும் அசதி, மறதி போன்றவை நீங்கிவிடும்.

அப்படி என்னப்பா இந்த பயோ டிஸ்க் வேலை செய்கிறது ? என்ற கேள்விக்கு,

பதில் கேள்வியாக அவர்கள் கேட்டது

அதாவது மலை காடுகளில் வரும் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா...

ஆமாம்ங்க, ஒத்துக்கொள்கிறேன், காரணம் மலையில் இயற்கையாக தோன்றி வரும் போது அவை பல்வேறு மூலிகைகளில் பட்டு வருகிறது, அதனால் அந்த தண்ணீர் நல்ல தண்ணீர் என்று நம்ம முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்..

அப்படியே பாய்ண்ட்டை பிடித்துவிட்டதுபோல உற்சாகமாக பேச ஆரம்பித்தார்...

அதாவதுங்க, மலை காடுகளில் வரும் தண்ணீரை போல நம்ம போர்வெல் வாட்டர் சத்து உள்ளது அல்ல. 

ஆமாம் நீங்க சொல்றது சரிதான் சார், என்று சொல்லிவைத்தேன்...

அதனால ஜெர்மனியில இருக்க மருத்துவர் தன்னோட ஆராய்ச்சி மூலமா கண்டுபிடிச்சது தான் இந்த பயோ டிஸ்க். அதாவது இந்த பயோ டிஸ்க்ல பயர் ப்யூஷன் முறையிலயும், நானோ டெக்னாலஜி முறையிலயும் பதினாலு மினரல்ஸை புகுத்தி, அதன் மூலமா பலரோட வாழ்க்கைக்கு ஒளியேத்தினார் மருத்துவர் இயான் லியோன்ஸ். (மேலே படத்தில் இருப்பவர்கள். படம் உதவி கூகிள் அண்ணாச்சி)

அதனால அந்த பயோ டிஸ்க்கை உபயோகப்படுத்தி நாம பயன் அடையுறோம். இந்த பயோ டிஸ்க் மூலமாக தண்ணீர் பாயும்போது அந்த மினரல்ஸ் நம்ம தண்ணீர்ல உடைஞ்சு போன, ஓஞ்சு போன மினரல்ஸை சரிப்படுத்தி உருப்புடியா மாத்துது. அதன் மூலமா நாம குடிக்கிற தண்ணீர் நமக்கு டாக்டரா செயல்படுது என்று மிகப்பெரிய லெக்சரை முடித்தார்.

இந்த பயோ டிஸ்கோட சேர்த்து ஒரு பெண்டண்ட் ஒன்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்த அந்த பெண்டண்டை எடுத்து காட்டினார். 


அதாவது பயோ டிஸ்க் 22 ஆயிரம், இந்த பெண்டண்ட் ஒரு பதினைந்தாயிரம், இரண்டும் சேர்ந்த ஒரு பேக்கேஜ் ஆக 35 ஆயிரம். இந்த பெண்டண்டை கழுத்தில் போட்ட பிறகு, நீண்டகாலமாக இருந்த முட்டிவலி (????) குணமாயிட்டதாம். காலையில் ஆறு மணியில் இருந்து இரவு 12 மணி வரை வேலை செய்தாலும் உடல் சோர்வடைவதே இல்லையாம்..

இந்த பொருளுக்கு CE போன்ற தர சான்றிதழ் கிடைத்துள்ளதா என்று ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எழுப்பினேன். அதை மிகுந்த கான்பிடன்ஸோடு எதிர்கொண்டவர், இது ஒரு ஹெல்த் ப்ராடக்ட் அல்ல, ஒரு வெல்னெஸ் ப்ராடக்ட், இதற்கு அது போன்ற சர்ட்டிப்பிக்கேட் எதுவும் தேவை இல்லை என்றார்.

இரண்டு அரை எலுமிச்சை பழங்களை ஒன்று இடது கையிலும் ஒன்று வலது கையிலும் கொடுத்து, இரண்டையும் சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒன்று பயோ டிஸ்க் மூலம் எனர்ஜி செய்யப்பட்டது, ஒன்று பயோ டிஸ்க் இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் வைக்கப்பட்டது. இரண்டும் எனக்கு எலுமிச்சை சுவையாக தெரிந்தது, பெரிதாக எதுவும் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மையாரோ, ஆஹா, பயோ டிஸ்க் மூலம் எனர்ஜைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை சுவையோ சுவை என்று கூற, நானும் சபை நாகரீகம் கருதி, ஆமாங்க அப்படித்தான் என்று மையமாக தலையாட்டி வைத்தேன்...

இந்த ஸ்டோரியில் ஒரு சப் ஸ்டோரியாக, இந்த டெமோ ஒரு பக்கம் நடக்க, யாழினி அப்போது லொக் என்று ஒரு இருமல் விட, இதை நான் ரெய்க்கியில் குணமாக்குகிறேன் என்று அந்த வீட்டு அம்மையார் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அல்லேலூயா கும்பல் ஆசீர்வதிப்பது போல தலையில் கை வைக்க, யாழினி அதை விரும்பாமல் கையை தட்டிவிட, சரி அப்ப நான் டிஸ்டன்ஸ் ரெய்க்கி கொடுக்கிறேன் என்று கொஞ்சம் தூரத்தில் இருந்து மொன மொன என்று ஏதோ சொல்லி ஆசீர்வதித்தார்கள். (அன்னாரது மாமியார் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்க கலிபோர்னியா வரை டிஸ்டன்ஸ் ரெய்கி கொடுக்கிறாராம். இது வேறொரு ஆராய்ச்சி தலைப்பு. 

இந்த பயோ டிஸ்க் என்பது தண்ணீயை மட்டும் சுத்திகரிக்காதாம். அதை சுத்தி அஞ்சு அடிக்கு உள்ள பொருட்களை எல்லாம் சுத்திகரிச்சுவிடுமாம். அதாவது சமையல்கட்டில் உள்ள எலுமிச்சை, குளிர்சாதன பெட்டியில் உள்ள முள்ளங்கி, அப்புறம் தாளிக்க வைத்துள்ள கடுகு உளுத்தம்பருப்பு என்று அனைத்தையும். மேற்படி பத்தியில் சுவைக்காக கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் கூட பயோ டிஸ்க் டெமோ செய்வதற்காக பயோ டிஸ்கில் இருந்து வெகுதொலைவில் (அதாவது சமையல் அறையில் இருந்து படுக்கை அறையில்) வைக்கப்பட்டதாம்.

கடைசியாக, இந்த பயோ டிஸ்கை வாங்க வேண்டும் என்றால் அவரது ரெபரன்ஸ் ஐடி மூலம் வாங்கினால் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று சொன்னார். எல்லாத்தையும் மெயில்ல அனுப்பிடுங்க, வாங்கிடலாம் என்று சொல்லிவிட்டு, பயோடிஸ்க் மூலம் டிஸ்டன்ஸ்ல வைத்து எனர்ஜைஸ் செய்யப்பட்ட ஆரஞ்சு பழரசத்தை அருந்திவிட்டு நடையை கட்டினோம்.

இந்த பயோடிஸ்க் பற்றி இணையத்தில் ஆரய்ச்சி செய்யும்போது இதன் ஏமாற்று வேலைகள் பற்றி பல ரெபரன்ஸ்கள் கிடைத்தன. கேரளாவில் மருந்துவர்கள், டெண்டிஸ்டுகள் கூட இந்த பயோடிஸ்கை வாங்கி போட்டுவிட்டு, அதன் பின்னால் மற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நன்று கற்று அறிந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கூட இந்த வலையில் விழுந்துள்ளதும் தெரிகிறது. ஏன் இந்த பயோடிஸ்கை என்னிடம் விற்க முயன்ற தோழர் கூட தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்ந்த பதவி வகிப்பவர்தான்.

ஏற்கனவே காந்த படுக்கை என்று ஒரு MLM மோசடி (MLM என்பது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதின் சுருக்கமாகும் - அதாவது சங்கிலி தொடர் விற்பனை). அதாவது நீங்கள் ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்கினால், அதே பொருளை நீங்கள் பத்து பேருக்கு விற்று கொடுத்தால் உங்கள் பொருள் உங்களுக்கு இலவசம். இது போல பல வகையாக விற்பார்கள்.

காந்த படுக்கை பற்றி இணையத்தில் தேடினால், காவல்துறை வழக்கு விவரங்கள், ஏமாந்த சோனகிரிகள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் கொட்டும். நேரம் இருப்பவர்கள் தேடிப்பாருங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையானுக்கு / ஜீசசுக்கு என்று தபால் கார்டுகள் வரும். அந்த தபால் கார்டை படித்து அதை போலவே இருபது பேருக்கு எழுதி போட்டால் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் - சில பயனாளிகளின் தகவல்கள் காணப்படும். ஆனால் அந்த தபால் கார்டை புறக்கணித்தாலோ, கால் உடைந்து விடும். ஆண்மை குறைந்துவிடும். எயிட்சு வரும் என்று கிலி ஏற்படுத்துவார்கள். அதே போன்றதொரு மின்னஞ்சல் சமீபமாக எனக்கு வந்து சேர்ந்தது. இந்தமுறை ஏழுமலையானோ ஜீசசோ இல்லை. வினாயகர். 

ஆக, ஏமாற்றுபவர்கள், எம்.எல்.எம் கும்பல், ரெய்க்கி, வாஸ்து, மக்களின் மூட நம்பிகைகளை வைத்து பணம் செய்பவர்கள், கடிதம் மூலம் ஏழுமலையானை மார்க்கெட்டிங் செய்பவர்கள், மணியார்டர் மூலம் காசை வாங்கிக்கொண்டோ அல்லது வி.பி.பி மூலமோ விலங்குகளை பயமுறுத்தும் துப்பாக்கிக்கு பதில் செங்கல்லை வைத்து அனுப்புபவர்கள், நைஜீரியா கும்பல், ஆப்ரிக்க நாட்டின் செத்துப்போன நிதி மந்திரிக்கு பிறந்த கருப்பு மகளிடம் இருக்கும் இரண்டு மில்லியனை வைத்து ஏமாற்றுபவர்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் ஏ(கோ)மாளிகளாக ஆகாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும்.

இதை எழுதவேண்டும் என்று தோன்றியது ஏன் என்றால், இந்த கான்ஸெப்ட் இப்போது தான் வட இந்தியாவில் பரவி வருகிறது. இதை பற்றி மெயின் லைன் பத்திரிக்கைகள், நீயா-நானா மாதிரி அவேர்னஸ் க்ரியேட் செய்யும் ப்ரொக்ராம்ஸ், புதிய தலைமுறை செய்தி சேனல் இவர்கள் எல்லாம் அவேர்னஸ் க்ரியேட் செய்து, நம் தமிழ் மக்கள் ஏமாந்து காசை வீணடிக்காமல் உதவவேண்டும்.


Comments

புதிய தகவல்கள் ! நன்றி நண்பரே !
நல்லதொரு விழிப்புணர்வு தகவல். எல்லோருக்கும் சென்றடைய வேண்டும்.
நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு....
நன்றி நண்பரே...
Anonymous said…
பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மையாரோ, ஆஹா, பயோ டிஸ்க் மூலம் எனர்ஜைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை சுவையோ சுவை என்று கூற, நானும் சபை நாகரீகம் கருதி, ஆமாங்க அப்படித்தான் என்று மையமாக தலையாட்டி வைத்தேன்..//இதுதான் அவர்களுக்கு வேண்டும். கண்டிப்பாக பத்தில் ஒருவர் அல்லது ஏன் ஐம்பதில் ஒருவர் வாங்கினாலும் கொழுத்த லாபம்தான்.நல்ல பதிவு.
Senthazal Ravi said…
கருத்துரைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
Kannan said…
தகவலுக்கு நன்றி..


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
ஹ்ம்.. ஜெர்மன் பாத்திரம்..ஜெர்மன் மேக்கப் செட் இப்ப இதா.. :)
சத்தமில்லாம நடக்குது ..
Senthazal Ravi said…
அப்துல் காத்ர் நன்றி
ரவி,

பயோ டிஸ்க் அல்ல பல்ப் டிஸ்க் அது :-))

அந்த டிஸ்க்ல அமேசான் காட்டு அரிய மூலிகை மினரலே இருக்கட்டும் , தண்ணி தொடர்ச்சியா பாயும் போது மினரல் தேய்மானம் ஏற்படதா/ எனவே எத்தனை லிட்டர் தண்ணீர சார்ஜ் ஏற்றும்? எத்தனை வாட்ஸ் சார்ஜ் ஏறும், ஏறின சார்ஜ் எவ்லோ நேரம் நிக்கும்? செல்போனுக்கும் சார்ஜ் ஏத்துமா டிஸ்க்? :-))

கூடங்குளம் அணு உலையில் இருந்து கழிவு நீர் வெளியேறும் இடத்தில் பயோ டிஸ்க் வைத்தால் தண்ணீர் சுத்தம் ஆகிடுமா?

அந்த பெண்டன்ட் ஆளுக்கு ஒன்றுனு கூடங்குளம் மக்களுக்கு கொடுத்தா அணுக்கதிர் தாக்காமல் காப்பற்றலாமே :-)) இதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும்!

Popular Posts