Tuesday, September 04, 2012

மனிதன் பாதி! மிருகம் பாதி!


From : http://www.facebook.com/siva.sinna

அரை மணித்தியாலத்துக்குள் 63
தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை –
யாழ்ப்பாணத்தில் கொடூரம்!
சிங்களவர்களுக்கு மட்டுமல்ல,
தமிழர்களுக்கும் உண்டு
படுகொலை வரலாறு -
இளைஞர்களே மன்னித்துவிடுங்கள்!
மனிதன் பாதி! மிருகம் பாதி!
நீங்கள் பாதி மிருகத்தை அடக்கிவைத்த மனிதர்கள்-
அவர்கள் பாதி மனிதனை
தங்கள் பாதியிடம் பலிகொடுத்தவர்கள்’

இலங்கையில் மூன்று தசாப்தகாலம் ஈழப்போர் நடைபெற்றதாக அரசியல்-இராணுவ ஆய்வாளர்கள் பெரும்போக்காக வர்ணிப்பதுண்டு. நான்கு ஈழப்போர்கள் இடம்பெற்றன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1983இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிரபாகரன், செல்லக்கிளி உட்பட பதுங்கியிருந்து ஆயுததாரிகள் சிலர் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து நாடு பற்றியெரிந்தது. அன்று இலங்கையில் அதிகாரத்திலிருந்த யு.என்.பி.யின் ஆட்சி, செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கைகளில் ஆட்சிக் கடிவாளம் இருந்தது.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆசீர்வாதத்துடனும் உசுப்புதலுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான இனசங்காரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. முழு நாடுமே பற்றியெரிந்தது. சுமார் 350 தமிழர்கள் கொல்லப்பட்டனர் கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து நாசமாக்கப்பட்டது என்பதை அரசாங்க அறிக்கை கூறியது. மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனரென்று தமிழர் தரப்புகள் கூறின. இதனையே முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென்று சில ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடு பிரிவினைக்கான தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனையே சில அரசியல் நோக்கர்கள் முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென வகைப்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழீழ ஆயுததாரிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. யாழ்.மாநகர மேயராகவும், எம்.பி.யாகவும் விளங்கிய அல்பிரட் துரையப்பா 1975 ஜூலை 26இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபாகரனின் தலைமையிலான குழுவொன்றே இப் படுகொலையில் ஈடுபட்டது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே யாழ்.நூல்நிலைய எரிப்பு இடம்பெற்றது. 1977 ஆகஸ்ட் 13இல், யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மக்களுடன் பொலிசார் மோதிக்கொண்ட ஒரு சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகள் வேட்டைக்காடுகளாக மாறின. அப்பாவிப் பொதுமக்கள் பலர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990இல் இரண்டாவது ஈழப்போரும், 100 நாள் போர் அமைதிக்குப் பின்னர் 19 ஏப்ரல் 1995இல் மூன்றாவது ஈழப்போரும், 2006இல் நான்காவது ஈழப்போரும் ஆரம்பித்ததாக அரசியல் – இராணுவ நோக்கர்கள் வகைப்படுத்துகின்றனர். 2009 மே 18இல் யுத்தம் முடிவடைந்தது.

1987 ஜூலை இறுதியில் இந்தியப் படை திருகோணமலையில் வந்திறங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் இந்தியப் படையை வாழ்த்தி வரவேற்ற புலிகள், அதே ஆண்டு ஒக்டோபரில் இந்தியப் படையுடன் மோதலை ஆரம்பித்தனர். இரண்டரை வருடங்கள் நீடித்த இந்த மோதலில் சுமார் 1400 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களும் பலியானார்கள்.

யாழ் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இந்தியப் படை நடத்திய தாக்குதலில் டாக்டர்கள், நோயாளிகள், பணியாளர்கள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டனர். 1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. வீதிவழியே ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்து புலிகளின் குழுவொன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து இந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புகளுமே அப்பாவி மக்களைத்தான் அதிகளவில் பலியெடுத்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மைலந்தனைப் படுகொலை, வவுனியாப் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை என்று பலவற்றைப் பட்டியலிட முடியும். அனுராதபுர பௌத்த யாத்திரிகர் படுகொலை, அரந்தலாவைப் பிக்குமார் படுகொலை, தலதா மாளிகைத் தாக்குதல், சிங்கள எல்லைக் கிராமத் தாக்குதல்கள், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும்.

தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குள் உள் இயக்கப் படுகொலைகளும் தாராளமாகவே இடம்பெற்றிருக்கின்றன.

1983 ஜூலை இன சங்காரத்தின்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகள் 23, 25 ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெற்றன. ஆனால் 63 தமிழ்க் கைதிகள் அரை மணித்தியாலத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன. புலி இயக்க உறுப்பினர்கள் இரண்டே இரண்டு பேர் இந்தப் படுகொலைகளைப் புரிந்தனர். ஒருவனின் இயக்கப் பெயர் அருணா, மற்றவனின் இயக்கப் பெயர் சந்தியா.

1986ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரெலோ அமைப்பை தடைசெய்து நூற்றுக்கணக்கான கொலை செய்தும், உயிருடன் எரித்தும் வெறியாட்டம் நடத்தினர் புலிகள். 1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை புலிகள் தடை செய்தனர். இந்த இரண்டு இயக்கங்களின் முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்படிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே அப்போது கொல்லப்பட்டனர். புலிகளுக்குக் கப்பம் செலுத்தாததால் பிடித்துத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தகர்களும் இப் படுகொலையின்போது பலியானார்கள்.

1985ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பதாகையின் கீழ் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகியவை திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலை இடம்பெற்றது. இதனைக் ‘கந்தன் கருணைப் படுகொலை’ என்று அழைப்பதுண்டு. ‘கந்தன் கருணை’ என்பது ஒரு காரணப் பெயர். யாழ்ப்பாணத்தில் பல வீடுகளுக்கு கந்தன் கருணை இல்லம் எனப் பெயர் வைப்பதுண்டு. யாழ்ப்பாணத்தில் ‘அரஸ்கோ’ முதலாளி என்பவரின் ஆடம்பர வீடு நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அரசரட்ணம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது இந்த வீடு. நல்லூர் கோவில் வீதியிலும் ‘கந்தன் கருணை’ என்று பெயரிடப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. இந்த வீடுகள் ஒரு காலத்தில் புலிகளின் அலுவலககமாகப் பாவிக்கப்பட்டு வந்தன. ஆனால் படுகொலைகள் நடைபெற்றது இந்த வீடுகளிலல்ல.

புலிகளால் கைது செய்யப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் நல்லூர் கந்தன் கருணை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஒரு வீட்டுக்கு இடமாற்றப்பட்டிருந்தனர். இந்த வீடு சிவகுருநாதர் வீதியில் அமைந்திருந்தது. இங்குதான் படுகொலைகள் இடம்பெற்றன.

‘கந்தன் கருணை’ இல்லத்திலிருந்து இங்கு இடமாற்றப்பட்ட புலிகளின் கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால்தான் ‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ என்று சிலர் இதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்.

இந்த வீடு நடராஜா என்பவருக்கு சொந்தமானது. அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். படுகொலை நடைபெற்று பத்து வருடங்களின் பின்னர் இந்த வீட்டில் நடேசபிள்ளை வித்தியாதரன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இவர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவனின் சொந்த மைத்துனர். புலிகளின் காலத்தில் புலிச்சார்பு பத்திரிகைகளாக விளங்கிய ‘உதயன்’, ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இப் படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. அப்போது சிந்தியா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. சிந்தியாவின் தந்தை யாழ் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிவந்தார்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். அன்றைய தினம் காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவர் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவரே. கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தார். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான். நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் நாவலர் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான். அரை மணித்தியாலத்தில் 63 பேர் கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம்.

தாக்குதலின்போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன். இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா. விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி.

ஆனால் புலிகள் இயக்க உள் முரண்பாடுகளே கிட்டு மீதான தாக்குதலுக்குக் காரணமெனப் பின்னர் தெரியவந்தது. கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்தத் தாக்குதல். மாத்தையாவின் ஆட்களே இத்தாக்குதலை நடத்தினரென்ற சந்தேகம் பரவலாக வெளிப்பட்டது.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைகளுக்கு மாறியது. பிற்காலத்தில் ‘றோ’ உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தையாவைக் கைது செய்து, நிலத்துக்குக் கீழான சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து பிரபாகரன் கொன்றது வேறு விடயம். வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்த மாத்தையா நாயைப் போல நடத்தப்பட்டாரென்று இந்தியப் பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ‘ஐலன்ட் ஒப் புளட் (இரத்தத் தீவு) என்ற தனது ஆங்கில நூலில் அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனைப் பேட்டி கண்டவர் அனிதா பிரதாப். அத்துடன் சிறையிலிருந்த மாத்தையாவை பிரபாகரனின் அனுமதியுடன் பார்வையிட்டவர் அவர்.

இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தியப் படை இலங்கையின் வடக்கு – கிழக்கில் நிலை கொண்டது. ஜூலை இறுதியில் இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது. இந்திய இராணுவத்துடனான சண்டையில் குருநகரில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய கூர்க்கா இராணுவவீரனால் கொல்லப்பட்டான்.

மற்றைய கொலையாளியான சந்தியா என்பவன் முன்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றியவன். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான்.

கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டனவா அல்லது புதைக்கப்பட்டனவா? என்பது தெரியாது. ஆனால் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் சடலங்கள் எரிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளிவந்தன. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையை விட, ‘கந்தன் கருணை’ப் படுகொலைகள் குரூரமானவையென அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படுகொலைகள் குறித்துப் புலிகள் மௌனம் சாதித்தனர். ஆனால் மெல்ல மெல்ல விஷயம் கசியத் தொடங்கியதும் அதனைத் ‘தமிழீழத் துரோகிகளின் சதி’ என்று புலிகள் தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இது தொடர்பாகப் புலிகள் அறிக்கையொன்றினை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், அவர்களுக்குக் காவலுக்கு நின்றவர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பதினெட்டுக் கைதிகளும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேரும் பலியானானர்கள்’

அந்த காலப்பகுதியில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்டிருந்தார். அங்கு இலங்கை மாணவர்கள் சிலர், கந்தன் கருணைப் படுகொலைகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டிருந்தார்கள். அதற்கு, ‘கிட்டுவுக்கு நடந்த தாக்குதல் உட்கட்சிப் பிரச்சினையால் ஏற்பட்டது என்பது தவறு. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்கள் யார்?, அவர்கள் எங்கிருந்தார்கள்?, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி வடமராட்சியில் பிறந்தவர், கற்றறிந்த பேராசிரியர். முன்னாளில் முற்போக்குவாதியாக இனங்காணப்பட்டவர். எனினும் பின்னாளில் அவர் புலிகளின் விசுவாசியாக செயற்பட்டவர். ‘அதிகமான அப்பாவி மக்கள் இறப்பது, தமிழீழம் மலர வழிவகுக்கும்’ என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை புலிகளுக்கு வழங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது.

No comments:

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....