Monday, June 14, 2010

பேயோன் 1000 !!! எழுதுவது அமரர் சுஜாதாவா ?



ட்விட்டரில் அனைவரும் மண்டையை பிய்த்துக்கொள்வது ஒரு கேள்விக்கு. அது பேயோன் என்பவர் யார் என்பதே !! அவரது 1000 ட்விட் செய்திகள் புத்தகமாக வந்துவிட்டது. இன்னும் ஆள் யார் என்று தெரியக்காணோம்.

பத்தி எழுத்து வாட்ச்மேனுக்கு புரியாவிட்டால் தான் பத்திரிக்கைக்கு அனுப்புவேன் என்பதில் இருந்து பல இடங்களில் என்னைப்பொறுத்தவரை சுஜாதா டச். டெக்னாலஜியை முதலில் அறிமுகப்படுத்தும் சுஜாதா ஒருவேளை தேசிகன் (இப்போது சுஜாதா தேசிகன்) உதவியோடு நரகத்தில் இருந்து ட்வீட்டுகிறாரோ என்று சந்தேகிக்கவைக்கிறது ?

ட்விட்களை மொத்தமாக எழுதி இந்தாப்பா, நான் போனபிறகு ஒவ்வொன்னா போடு, ஆயிரம் வந்தா புத்தகமா போடு என்று கொடுத்துவிட்டாரா ? விளக்கம் ப்ளீஸ்..

பேயோன் பற்றி பரிசல்காரன் எழுதிய பதிவை வரிக்கு வரி விடாமல் காப்பி அடிக்கிறேன். இதன் மூலம் நான் எழுதவேண்டிய தேவை இல்லை. பரிசல்காரன் தானே ? காப்பி ரைட் செலவும் இல்லை. (ஊருக்கு போனால் ஒரு காப்பி வாங்கிக்கொடுத்தால் போச்சு).

என்னை ட்விட்டரில் senthazalravi என்ற பெயரில் தொடர்ந்துகொள்ளுங்கள். இனிம் பதிவு.


பேயோன் 1000

ல வருடங்களுக்கு முன் எல்லாரும் திருட்டு விசிடியை எதிர்த்தபோது கமலஹாசன் ஒன்று சொன்னார். ‘அறிவியலின் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து உங்கள் கலைகளை கொண்டு செல்லாவிட்டால் உங்களுக்குத்தான் கஷ்டம்’ என்று. இன்று வரை திருட்டு விசிடியை ஒழிக்க முடியவில்லை. அது திருட்டு டிவிடியாக வளர்ந்துதான் இருக்கிறது.

எழுத்திலக்கியம் கணினிக்குள் வந்து வலையுலகம் வாயிலாக பரந்து விரிந்து கொண்டிருக்க வந்தது ட்விட்டர். எனக்கு ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் ஓசியில் கிடைக்கும் எதையும் விடாத நான் அதையும் விடாமல் ஒரு கணக்கைத் தொடங்கினேன். கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே புரியவில்லை. (இப்போது ஒன்றாவது புரிந்திருக்கிறது) தினமும் என்னை ஃபாலோ செய்வதாக பலரும் வர கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தேன்.

ஒரு விஷயம் - அதில் கொஞ்சம் கொஞ்சமாய் அல்ல, கொஞ்சமேதான் எழுத முடியும். 140 எழுத்துகளுக்குத்தான் அனுமதி. இப்படியாகப்பட்ட கால கட்டத்தில் தமிழ் ட்வீப்பிள்ஸையெல்லாம் கவர்ந்தார் ஒருவர்.

ரைட்டர் பேயோன்.

தன்னை எழுத்தாளர் என்று தானே விளித்துக் கொள்கிறார். வசனகர்த்தா, முன்னணி எழுத்தாளர் என்று சொல்கிறார். யாரென்று யாருக்குமே தெரியவில்லை. இன்று வரை. ஆனால் அவர் நிச்சயமாக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர்தான் என்பது அவரது ட்வீட்களிலிருந்து புலனாகிறது.

‘வித்தியாசமாக பண்ண வேண்டும் என லிங்குசாமி சொல்கிறார். ஹிட்ச்சாக் டிவிடி தொகுப்பை வாங்கிச் சென்ற நண்பரோ இன்னமும் திரும்பத் தரவில்லை. தவிக்கிறேன்’ - இதுதான் இவரை நான் கண்ட முதல் ட்விட் என்று நினைக்கிறேன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும், சமயத்தில் எள்ளலாய் எழுதிக் கொள்வதும், உலக சினிமாவை 140 வார்த்தைகளில் விமர்சிப்பதும், ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதை எழுதுவதும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ரைட்டர் பேயோன்.

இவரது ட்விட்கள் ஆயிரம் சேர்ந்ததும் புத்தகமாக வரவிருக்கிறது என்று செய்தி பரவத் தொடங்கியதுமே எனக்கு ஆர்வம் அதிகமானது. இரண்டு நாட்கள் முன் சென்னை சென்றிருந்த போது கடை கடையாய் விசாரித்து, ஒரு வழியாய் வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் வடிவம், உள்ளே உள்ள எழுத்துரு, அட்டைப்படம் எல்லாமே கவர்கிறது. இதிலும் பேயோன் யாரென்று சொல்லாமல் பின்னட்டையில் அவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆனால் ‘இரண்டாயிரம் ஆண்டு கால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறை’ என்பதெல்லாம் ஓவர். ட்விட்டர் வந்து இரண்டாயிரம் ஆண்டா ஆகிறது? ஒருவேளை இதையும் பகடியாக பேயோனே எழுதிக் கொடுத்திருக்கலாம்)

புத்தகத்துக் கொடுத்த காசு அந்த முன்னுரைக்கே சரியாகப் போய்விட்டது. வாய்ப்பே இல்லை. முன்னுரைக்குப் பதிலாக, முன்னுரையில் ‘முன்னுரைக்குப் பதிலாக’ என்று ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி? என்ற தலைப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன்.

‘முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக் கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிச் சொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக..’ என்று ஆரம்பித்து சிக்ஸராக அடித்துத் தள்ளியிருக்கிறார்.

ட்வீட்கள்?

பல ஆகா அபாரம்களும், சில ஏமாற்றங்களும்.

49 ட்வீட்கள் முடிந்ததும் ஐம்பதாவதாக ஒரு ட்வீட். ‘எனது ட்விட்டரை தொடங்கியபின் 49 ட்வீட்களை எழுதிவிட்டேன். இன்றிரவுக்குள் 50 ட்வீட்களை எட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்’ என்பதையே 50வது ட்வீட்டாய் தருகிறார். உத்தி ரசிக்க வைக்கிறது. ஆனால் அதையே நூறாவதுக்கும், இன்னோரிரு இடங்களிலும் தருவது அயர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. போலவே சுவாரஸ்யமற்ற காலை வணக்கங்களை தவிர்த்திருக்கலாம். இரவு வணக்கங்களை கவிதை கலந்து தருவதால் ரசிக்க வைக்கிறது.

இரண்டொரு ட்வீட்கள் மறுபடி அச்சாகியிருக்கிறது. அவரே ஒரு ட்வீட்டில் ‘வெளியிடுவதற்கு முன் முகமன்கள், context இல்லா மறுமொழிகள், நன்றிகளை நீக்கினால் மின்னூல் முழுமையாக இருக்கும்’ என்றிருக்கிறார். ஆனால் பதிப்பாகும்போது அதைச் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் சில ட்வீட்கள் குபீர் சிரிப்பையும் சில ட்வீட்கள் !ஐயும் வரவைக்கிறது.

‘பொதுவாக என் பத்திகளை என் வீட்டு வாட்ச்மேனிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவருக்குப் புரியவில்லை என்றால்தான் பிரசுரத்திற்கு அனுப்புவேன்’

‘ஜப்பானியப் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாயகன் நாயகியுடன் உடலுறவு கொள்கிறானா அவளது அம்மாவுடனா எனத் தெரியாமல் எழுதுவது சிரமம்’

‘இயக்குனர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்தபின் 2002லேயே அவர் படங்களை பார்த்ததுபோல் எழுதவேண்டும்’

‘சென்னையில் அன்னா அக்மதோவா, அன்னா கரீனனா, அன்னா கிரிகோரிவ்னா (கிரிகோர்வினா) எல்லோருக்குமாக சேர்த்து ஒரு அன்னா அறிவாலயம் எழுப்பப்பட வேண்டும்

‘நேற்றிரவு தூங்கப் போனபோது நல்ல இருட்டு. காலை எழுந்து பார்த்தால் நல்ல வெளிச்சம். இடைப்பட்ட நேரத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’

‘1. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதை சொல்ல அழைத்திருந்தார். நான் கதை சொல்ல துவங்கியதும் தூங்கிவிட்டார். 2. அவரது மேஜையில் கிடந்த ப்ரிஸ்கிரிப்ஷனில் என் பெயரைப் பார்த்ததும்தான் எனக்கு விஷயமே புரிந்தது’

‘படிப்பது என்றால் மற்றவர்கள் எழுதியதை படித்தல். வாசிப்பது என்றால் எனது படைப்புகளை படித்தல்’

‘ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்று புரிந்தது. தஸ் புஸ் என்று பேசினால் ஆங்கிலம். தஸ்ய புஸ்ய என்று பேசினால் சமஸ்கிருதம்’

‘தன்னடக்கத்தில் எனக்கு நிகர் நானேதான்’

‘எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன். ‘பஹூத் போர் ஹே’ என்றார். போர்ஹேயுடன் ஒப்பிடுகிறார்’


‘போலான்ஸ்கியை சிறையில் தள்ளிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். ஒரு கலைஞன் குற்றம் செய்தால் குற்றமாகுமா? குற்றவுணர்வு தரும் தண்டனை போதாதா?’

இவை ஒரு சில.

யார் இந்த பேயோன் என்று தெரியாவிட்டாலும் எஸ்.ராவாக இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவதாக பல தகவல்கள். பெண்களைக் குறிப்பிடும்போதெல்லாம் துப்பட்டா பற்றி எழுதுகிறார். விகடனில் எழுதுகிறேன் என்கிறார். என் தொடர் ‘இன்னும் பரவும்’ என முடிக்கிறேன் என்கிறார். (விகடனில் வரும் எஸ்.ரா-வின் சிறிது வெளிச்சம் அப்படித்தான் வாரா வாரம் முடிகிறது) அலைதலே தேசாந்திரிக்கு வித்திட்டது என்கிறார்.

யுவகிருஷ்ணாவோ, எஸ் ரா என்று தன்னை எல்லாரும் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறார் என்கிறார். நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது. அதை அவர் புரிந்து கொண்டு புகுந்து விளையாடுகிறார் என்கிறேன் நான்.

பேயோன் எஸ்.ரா. இல்லையென்றால் நிச்சயமாக அது பா.ரா-தான் என்பது என் அனுமானம். ஏனென்றால் பேயோன் பா.ரா இல்லை என்று இரண்டு பேர்தான் சொல்கிறார்கள். 1) பா.ரா. 2) யுவகிருஷ்ணா.

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் ட்விட் தொகுப்பு என்ற பெருமை பெற்ற இந்தப் புத்தகத்தில் என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் அவசியமாகிறது. போலவே நீங்கள் வாங்க வேண்டும் என்பதும்.

பேயோனைட்விட்டரில் பின் தொடர:- இங்கே க்ளிக்கவும்.

என்னை ட்விட்டரில் பின் தொடர இங்கே க்ளிக்கவும். (நெல்லுக்கிழைத்த நீர்....)

பேயோன் 1000
ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு
விலை: ரூ.60
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை,
யுனைடட் இந்தியா காலனி
கோடம்பாக்கம், சென்னை - 24
044-237202939

.

ஆன்லைனில் வாங்க:- இங்கே க்ளிக்கவும்.

7 comments:

ரவி said...

சுஜாதா தேசிகன் பெயரை பதிவில் உபயோகப்படுத்தியுள்ளேன். அவர் விரும்பவில்லை என்றால் எடுத்துவிடுகிறேன்.

ரவி said...

சுஜாதா சொர்க்கத்தில் இருக்கும் அகண்ட பஜனை சத்தம் பிடிக்காமல் நரகத்துக்கே போக விரும்பினார்.

Bruno said...

உங்களுக்கு தெரியாதா

பேயோனும் பாராவும் சமகால டிவிட்டர்கள்

இருவரும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருப்பார்கள்

--

அப்புறம் பேயோன் தொலைபேசி துறையில் வேலை பார்ப்பதாக கூறுகிறார்கள். விசாரிக்கவும்

Rangan Kandaswamy said...

எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்!

:-)

பரிசல்காரன் said...

ஒரு லிங்க் குடுத்து நாலு ஹிட் வர்றதுல அப்படி என்னய்யா காண்டு உமக்கு?

:-)

உங்க பதிவுல படிக்கறப்பதான் தப்பு தெரியுது பாருங்க.. அது நெல்லுக்கி’றை’த்த நீர். தப்பா எழுதிருக்கேன்.


btw, நன்றி!

smart said...

என்னண்ணே! சவுக்கியமா? வோர்ட்பிரஸ்ல இருந்து உண்மை வந்திருச்சா? அப்படியே அந்த ஆபாச பின்னுட்டம் என்னது இல்லைனும் ஒரு பதிவ போடுங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான ட்வீட்டர் செய்திகள்
ரவி. தாங்களும் புத்தகம்
போடலாமே?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....