ஏலியனை (வெளிகிரக உயிரினம்) பார்த்தேன்...

சென்னையில் சந்தித்தபோது, நம்மை காரில் பிக்கப் செய்யவந்த நன்பர், லக்கியாரிடம் கூறிய விஷயங்களை அரண்டு போய் பதிவிட்டிருந்தார்..

இந்த வாரம் அதிபயங்கர அதிரடியான இன்னொரு விஷயம் கொடுத்தார் நமது நன்பர்..மங்களூருக்கு அருகில் சக்லேஷ்புரா என்ற கிராமம், நம்மூரு ஊட்டி மாதிரி..அங்கே கைவிடப்பட்ட ஒரு ரயில்வே பாதை உள்ளது...(இப்போது பணிகள் நடந்துகொண்டுள்ளன)...அங்கே வார இறுதியில் ட்ரெக்கிங் செல்வது என்னு முடிவானது..சக்லேஷ்புராவில் சிற்றுந்துகளை நிறுத்திவிட்டு ரயில் பாதையில் நடந்துசென்று, 16 கிலோமீட்டரில் உள்ள 'எருக்கமேரி' இரயில் நிலையத்தை அடைந்து டெண்ட் அடித்து தங்குவது. பிறகு மேலும் 8 கிலோமீட்டர் நடந்துசென்று, அக்கிப்பள்ளி என்ற இடத்தில் மலையில் உள்ள பாதை வழியாக இறங்கி, 3 கிலோமீட்டர் கடந்து, அதிவேகமாக ஓடும் ஆற்றை கடந்து மேலேறி தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி எட்டை அடைவது..பின்னர் ஏதாவது லாரியை பிடித்து நாற்பது கி.மீ பயணம் செய்தால் மீண்டும் சக்லேஷ்புரா...பிறகு பெங்களூர்...இதுதான் திட்டம்...வழியில் உணவுக்கு ஆங்காங்கே நெருப்பை மூட்டி MTR பாக்கட்டுகளை உபயோகப்படுத்துவது....

ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வழியெங்கும் உள்ள சிற்றருவிகளும், அதன்மேல் உள்ள ரயில்வே பாலங்களும்( அதிகபட்ச நீளம் 700 மீட்டர், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர்), நீண்ட கும்மிருட்டு குகைப்பாதைகளும் (அதிகபட்ச நீளம் 585 மீட்டர், அரைகிலோமீட்டருக்கு மேல்), அதில் நீக்கமற நிறைந்திருந்த வவ்வால்களும்...

ரயில்வே பாலங்களை மிகுந்த எச்சரிக்கையோடு அடிமேல் அடிவைத்து கடக்கவேண்டும்..காரணம் இரண்டு ட்ராக்குகளுக்கு மத்தியில் இருக்கும் கனெக்டர்தான் ஒரே இணைப்பு..அதில் கால்வைத்து தான் நடக்கவேணும்...இந்த ட்ரெக்கிங்கில் ஒரே ஒருவர்தான் ஹீரோ...அவர் யாரென்றால் வழியெங்கும் எங்கள் கால் / கை என மொய்த்து ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப்பூச்சி..

காட்டுப்பாதையை கடந்து நெடுஞ்சாலையை அடைந்தபோது மொத்தமாக என் காலில் / கையில் / வயிற்றில் கூட (இரண்டு) இருந்த அட்டை பூச்சிகள் மொத்தம் 20 க்கும் மேல். ( அனைத்தும் ரத்தம் குடித்து வயிற்றை நிரப்பிய நிலையில்)...

இந்த அட்டைப்பூச்சி நல்ல விவாதம் ஒன்றை தூண்டியது...என் நன்பர் ஒரு கருத்தை எடுத்துவைத்தார்...அது உண்மையில் எனக்கு புதிய விஷயம், அது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருந்தது...

அவர் கூற்றுப்படி அட்டைப்பூச்சி (லீட்ச்) பூமியின் உயிரினம் அல்ல...எங்கொ வெளிகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தது என்கிறார்..அவர் எடுத்து வைக்கும் வாதங்கள்..

1. அட்டைப்பூச்சி - புற உதா கதிர்களால் பார்க்கிறது...அட்டைப்பூச்சியின் கண்ணுக்கு ப்ரிடேட்டர் படத்தில் வரும் ஏலியனுக்கு தெரிவதுபோல்தான் தெரியும்..

2. சிறிய அதிர்வையும் கண்டுகொள்கிறது...

3. அட்டைப்பூச்சி சுவாசிப்பதில்லை..

4. அட்டைப்பூச்சி உணவு ஏதும் இல்லாமல் சுமார் ஒருவருடத்துக்கு மேல் வாழக்கூடியது..

5. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் ரத்தம் / உயிரினங்கள் அனைத்திலும் அதிகபட்ச சத்துக்கள் கொண்டது / அதனை மட்டுமே உண்டு வாழ்கிறது.

6. இனப்பெருக்கம் செய்ய யாரும் தேவையில்லை..முட்டைகளை ரத்தத்தில் வைத்து பாதுகாக்கிறது.

7. இரண்டாக வெட்டினாலும் அடுத்த பகுதி வளர்ந்துகொள்ளும்..அது தலையாக இருந்தாலும் வாலாக இருந்தாலும்..

இவ்வாறு பல விஷயங்களை கூறுகிறார்...

மழையால் குளிர்ந்த பூமியில், எப்படி அந்த முதல் உயிரினம் வந்தது...வானத்தில் இருந்தா குதித்திருக்கும் ? என்றால், ஆமாம்...அப்படித்தான் என்கிறார்...

என் எண்ணம் எல்லாம்..அதுதானே...எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு ஆரம்ப புள்ளி இருக்கவேண்டுமே ? ஒரு செல் உயிரினம் அப்படியே தோன்றிவிட்டதா ? கடவுள் படைத்தார் என்று கட்டுக்கதையை எவ்வளவு நாள் நம்புவது ? கண்டிப்பாக உயிரினம் உள்ள ஏதோவொரு கிரகத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்...அந்த வேறொரு கிரகத்துக்கு எப்படி வந்தது என்று ஆராய விரும்பவில்லை...

இரவு முழுவது அட்டைப்பூச்சி பற்றியே சிந்தனை...உங்கள் கருத்தை சொல்லுங்க....

Comments

ரவி,

இந்த அட்டைப்பூச்சிகள் நமது அரசியல்வாதிகளுக்கு இன்ஸ்பிரேஷன்னு நினைக்கிறேன்.

நானும் இம்முறை மூணாறில் அட்டைக்கடி அனுபவித்தேன்.

நல்ல படங்கள்.
அங்கேல்லாம் அட்டைப்பூச்சித் தொல்லையா?

இங்கே சென்னையிலே ஒரே கொசுத்தொல்லை. எனக்கும் சிக்குன் குனியான்னு நெனைக்கிறேன். உடம்பு உதறி உதறிப் போடுது.

கொசு கூட ஏலியனாக இருக்கலாம். நண்பரிடம் கேட்டுச் சொல்லுங்களேன்.
Attai puchiyil ivlo vishayam irukka? Good post & Photos.
இந்த தலைப்பு யாராவது உயிரியல் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம், ஆராய்ந்து டாக்டர் பட்டமே வாங்களாம்.

யாராவது இருக்கீங்களா. . . . ?
பூமியில் உயிர் வெளி உலகம் ஒன்றில் இருந்து தான் வந்தது அப்படித்தான் முதல் முதல் உயிர் உருவானது என்று இன்றும் சிலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

போட்டோ எல்லாம் நன்றாக இருந்தது.
வாங்க ஹரி, படங்கள் எடுத்தது என் LG KG300 மொபைல் காமிராவில்...
////இங்கே சென்னையிலே ஒரே கொசுத்தொல்லை. எனக்கும் சிக்குன் குனியான்னு நெனைக்கிறேன். உடம்பு உதறி உதறிப் போடுது.////

எலக்ஷன் எப்படி போச்சுதுப்பா ? அதான் முடிஞ்சு போச்சே, ஒரு நாள் லீவப்போட்டுட்டு வீட்ல போர்வையை போத்திக்கிட்டு நல்லா தூங்குங்க...

சிக்குன் குன்யாவால எதுவும் ஆகாதுன்னு அ.மணி ரா.தாஸ் சொல்லிட்டாருல்ல அதான்...

///கொசு கூட ஏலியனாக இருக்கலாம். நண்பரிடம் கேட்டுச் சொல்லுங்களேன். //

:))))))))))))))))
///Attai puchiyil ivlo vishayam irukka? Good post & Photos. ///

நன்றி அனு.
/////பூமியில் உயிர் வெளி உலகம் ஒன்றில் இருந்து தான் வந்தது அப்படித்தான் முதல் முதல் உயிர் உருவானது என்று இன்றும் சிலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். /////

குமரன், இது பெரிய விவாதத்தை 5 நிமிடம் முன் கிளப்பியது...எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவு செய்யப்பட்டது....
Anonymous said…
what discussion was that ? please write.
ரவியண்ணா,
நல்லாய் இருக்கு பதிவு. புகைப்படங்களும் நல்லாய் இருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. நீண்டு போய் விடும் எனது கருதியிருந்தால் இரண்டு மூன்று பகுதியாக எழுதியிருக்கலாம்.
நன்றி அனானி...

அது என்ன என்றால்....

ஒரு நன்பரிடம், முதல் அணு எப்படி உருவானது என்று கேட்டேன்..அவர் சொன்னார்..புரோட்டீனில் இருந்து என்று சொன்னார்...ஆனால் எப்படி..இப்போதுகூடத்தான் புரோட்டீன் உள்ளது...அதில் இருந்து ஏன் அணு உருவாவதில்லை என்றேன்..

அவர் கூறிய பதில், அது "வெவ்வேறு மாற்றங்கள்" தேவை என்றார்..

அந்த வெவ்வேறு மாற்றங்களை நாமே உருவாக்கி ஏன் புரோட்டீனில் இருந்து ஒரு அணுவை தயாரிக்க முடியுமா ?

அதுக்கு உண்டான அனைத்து வசதிகளும் அறிவியல் நுட்பங்களும் நம்மிடம் உள்ளனவே இப்போது...

எனக்கு பதில் சொல்லாமல் நண்பர் தெறிச்சுட்டாரு...
அட்டைப்பூச்சி கடிச்சு முடிக்கற வரைக்கும் உறைக்காதுன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.

அட்டைப்பூச்சி கடி வாங்காம தப்பிக்கனும்னா Calcium hydroxide தடவிக்கலாம்னு சொல்றாங்க

http://en.wikipedia.org/wiki/Leech#Prevention
//அட்டைப்பூச்சி கடிச்சு முடிக்கற வரைக்கும் உறைக்காதுன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.//

உறைக்காது என்பது மட்டும் அல்ல, பாதியில் பிய்த்து எடுத்தால் ரத்தப்போக்கு நிற்க்கவே இல்லை..நீண்ட நேரம்..அது என்ன கெமிக்கலை தக்காளி சாஸ் போல போடுகிறது என்று தெரியவில்லை..

இந்த Calcium hydroxide எங்க சாமி கிடைக்கும் ?
///
அந்த வெவ்வேறு மாற்றங்களை நாமே உருவாக்கி ஏன் புரோட்டீனில் இருந்து ஒரு அணுவை தயாரிக்க முடியுமா ?
///

அமினோ ஆஸிட்ஸ் என்பதை தயாரிக்க முடியும். ஆனால் புரோட்டீன்களில் இருந்து ஒரு உயிரினம் தயாரிக்க முடியுமா என்று தெரியவில்லை.
உயிரினம் உள்ள ஏதோவொரு கிரகத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்...

அப்படி வந்த இனம் எங்கள் தமிழினமே என்று வட்டச் செயலாளர் ஒருவர் என்னிடம் கூறினார். அட்டையிடம் தமிழ் பேசிப் பார்த்தீர்களா?
எனக்கும் சிக்குன் குனியான்னு நெனைக்கிறேன். உடம்பு உதறி உதறிப் போடுது.

ஐயோ.

இப்போது எப்படி இருக்கிறது லக்கி லுக்? டாக்டரை பார்த்தீர்களா?

கவனித்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்களா?
வணக்கம் ரவி,

ட்ரெக்கிங்லாம் போற பழக்கம் உண்டா , சாகஸ விரும்பியோ?
னல்ல அனுபவமாக இருக்கும் நகரத்தில் நரக வாழ்க்கையில் இருந்து ஒரு மாறுதலாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும்.நமக்கு இங்கே எல்லாம் ட்ரெக்கிங் போக வசதி இல்லை. முன்னர் வாங்கிய கியர் உள்ள ஒரு சைக்கிள் உள்ளது அதை அவ்வப்போது தூசு தட்டி இரவு
நேரங்களில் 10 கிலோ மீட்டர் தூரமாவது செல்வேன் , அதுவே நமக்கு ஒரு சாகசப்பயணம் தான்.

இந்த ஏலியன் சமாச்சாரத்திற்கு வருவோம்.

அட்டை போன்ற எளிய உயிரினங்களில் எல்லாம் ஆண்/பெண் வேறுபாடு இருப்பதில்லை. மண் புழு ஒரே நேரத்தில் ஆணாகவும் , பெண் ஆகவும் இருக்கும்.

ரத்ததானம் பண்ணுங்கனு சொன்ன பண்ண மாட்டிங்க ஆனால் 20 அட்டைக்கு ரத்தம் கொடுப்பிங்களே!

அட்டை மருத்துவத்திலும் உதவுகிறது, சில இடங்களில் அடிப்பட்டு ரத்தம் உறைந்து விட்டால் அங்கு ரத்த ஓட்டம் மீண்டும் வர அட்டையை அந்த இடத்தில் கடிக்க விடுவார்கள் , அட்டையின் உமிழ் நீரில் ரத்ததை உறையாமல் வைத்து இருக்கும் ஒரு வேதிப்பொருள் உள்ளதாம்!

கரப்பான் பூச்சியின் தலையை வெட்டி போட்டாலும் ஒரு வாரம் வரை சாகாது , அப்பொது கூட தலையில் வாய் இருப்பதால் வாய் கொண்டு சாப்பிட முடியாமல் பட்டினியால் தான் சாகிறது தலைப்போனதல் அல்லா!

அப்போ அவை எல்லாம் ஏலியனா?

பூமி உருவான காலத்தில் எங்கும் நீர் மட்டுமே இருந்தது , பின்னர் பெரு மழை பெய்த்தது , அதனால் பல வாயுக்கள் கரைந்து ஒரு வகையான வேதியல் குழம்பு உருவானது, அதற்கு "காஸ்மிக் சூப் "என்று சொல்கிறார்கள் அதன் மீது அதிக மின்சக்தி உள்ள மின்னல் பல முறை பாய்ந்ததால் முதல் ஒரு செல் உயிரினம் உருவானது அது நீர்வாழ் உயிரினமாகிய கடல் பாசி.. பின்னர் அதனில் இருந்து அமிபா எனப்பல உயிரினங்கள்.

இது போன்ற ஒரு செயற்கை சூழலை உருவாக்கி ஒரு செல் உயிரினம் உருவாவது சாத்தியம் என சில விஞ்ஞானிகள் சொல்லியுள்ளார்கள்.

பிரபஞ்சத்தின் ரகசியம் என எழுத்தாளர் சுஜாதா அவரின் கற்றதும் பெற்றதும் தொடரில் விகடனில் இதைப்பற்றி எழுதியுள்ளார். சக்தி வாய்ந்த ரேடியோ தொலைனோக்கி மூலம் பிக் பாங் பெரு வெடிப்பின் ஆரம்பத்தை தற்போது புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
தம்பி said…
என்ன செந்தழலாரே!

ஒரு சுருட்டு குடிச்சா அட்டை பூச்சி நெருங்கவே நெருங்காதாமே, தெரியாதா உங்களுக்கு.

ஒரு பாக்கெட் ஜப்பார் சுருட்டு வாங்கிட்டு போயி ஆளுக்கு ஒண்ண இழுத்துருந்திகன்னா அட்டை பூச்சி ஓடியே போயிருக்கு,

இது சும்மா இல்லீங்க நிஜம்.
அடுத்த முறை முயற்சி பண்ணி பாருங்க!
nanbare konjam tobbaco eduththu uldampil theyththirunthaal attai nammalaik kadikkathu enkiRaar nam nanbar!
/********************************
அந்த வெவ்வேறு மாற்றங்களை நாமே உருவாக்கி ஏன் புரோட்டீனில் இருந்து ஒரு அணுவை தயாரிக்க முடியுமா ?

அதுக்கு உண்டான அனைத்து வசதிகளும் அறிவியல் நுட்பங்களும் நம்மிடம் உள்ளனவே இப்போது...
********************************/

நம்மிடம் வசதிகள் தான் உள்ளது, இயற்கையிடம் இருக்கும் சக்தி நம்மிடமில்லை.

உயிரை உருவாக்கும் சக்தி இயற்கையிடம் மட்டுமே உள்ளது.

அச்ச ரேகை தீர்வு ரேகை (விகடன் பிரசுரம்) படித்தால் இவை எல்லாம் புரியும்.
This comment has been removed by a blog administrator.
ஷைலஜா said…
அட்டை இவ்வளோ பொல்லாததா?
நான் ஏதோ ஃபெவிகால் மாதிரி மேலபட்டா ஒட்டிக்கும் லேசா ரத்தத்தை உறிஞ்சும்னு மட்டும் நினச்சிட்டுருந்தேன்.. யப்பா! அதன் குணங்களைப் படிச்சதும்
குலைநடுக்கமா இருக்கு..எப்படி ரவி தைரியமா இருந்தீங்க?போயும் போயும் அட்டைக்கு ரத்ததானம் செய்துவந்தீங்களா?ஆனாலும் உங்க அனுபவம் படிக்க சுவாரஸ்யமா இருக்கு!
ஷைலஜா
Anonymous said…
நல்லா எழுதினீங்க....அட்டை பூச்சிகள் போல உலகத்தில் நிறைய மக்கள் உள்ளனர்.....பழைய கொள்கைகளிலிருந்து வெளிவராமல்....
tbr.joseph said…
அட்டை மருத்துவத்துக்கும் பயன்படுகிறது என்றால் நம்புவீர்களா?

இப்போதும் காயங்களைச் சுற்றி கட்டி நிற்கும் கெட்ட ரத்தத்தை அதாவது கெட்டியாகிப்போன ரத்தத்தை உறிஞ்ச மருத்துவர்கள் அட்டையையும் பயன்படுத்துகின்றன!
பல புதிய தகவல்கள் கிடைத்தது... நல்ல பதிவு, பயணம், புகைப்படங்கள்... வாழ்றீங்கய்யா!
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டு காலங்களில் அலோபதி மருத்துவம் நம்மூர் குறி சொல்லுபவரின் நிலையில்தான் இருந்தது. அப்போது இயற்கை விளைவுகளான சில விஷயங்களை (ஹி, ஹி, அதுதான்) கட்டுப்படுத்த மனிதர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சிவிடுவார்களாம். அதற்கு அட்டையை பயன்படுத்துவர்.
மியூஸ், கருத்துக்கு நன்றி..

ப்ளாஸ்டிக் சர்ஜரி அல்லது புதிய தோல் பொருத்தினால், அந்த தோலில் ரத்தம் பாயும் வகையில் அட்டைபூச்சியை கடிக்கவிட்டுவிடுவார்களாம்...
Anonymous said…
உங்க நண்பரின் ஆராய்ச்சி அருமை!
படங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது! :)
Anonymous said…
superb service. god bless u. continue ur services
ரவி!
இந்த அட்டை இலங்கையில் மலைப்பிரதேசத்தில் குறிப்பாகத் தேயிலைத் தோட்டங்கள்; ஆற்றோரங்களில்
அதிகம். இது கடித்தால் அகற்ற தோட்டத் தொழிலாளர்கள் வாயில் புகையிலையைக் குதப்பி அந்தச் சாற்றைத் துப்புவார்கள். கழன்று விடும். அடுத்தது நெருப்பு..அதற்காக வாயில் உள்ள பீடி;சுருட்டை பாவிப்பார்கள். வலுகட்டயமாகப் பிடுங்கினால் அதன் பல் தசையில் மாட்டிக்கொள்ளும்; தொடர்ந்து இரத்தப் போக்குமிருக்கும்; உப்புக் கூட பட்டால் கழண்டுவிடும். சேர்க்கை உரம் வந்த பின் பலர்
அதைக் கூடத் அட்டையில் கொட்ட அது கழண்டதைக் கண்டுள்ளேன்.
மேலும் வவ்வால்; ஜோசப் அவர்கள் குறிப்பிட்டது போல் இது மருத்துவத்தில் பெரும் பங்கு வகுத்துள்ளது; ஆண்டாண்டு காலமாக புண்களைச் சுற்றியுள்ள துர்ரத்தத்தை நீக்க மருத்துவத்தில்
அட்டையைக் கடிக்கவிடுதல் பல வருடங்களுக்கு முன் ஆயுள்வேத மருத்துவத்தில் கட்டு வைத்தியமெனும்; புண் சம்பந்தமான வைத்தியப் பகுதியில் படித்துள்ளேன்;
சமீபத்தில் ஒரு ஜேர்மன் விபரணச் சித்திரத்தில் இது பற்றி மிக விபரமாகப் பார்த்தேன். இங்கே அட்டைகள் குறைவு அத்துடன் அளவில் சிறிதென்பதால் அவர்கள் அமேசன் நதி சார்ந்த இடங்களில்;இந்தோனேசிய காடுகளில் உள்ள சுமார் 2 அங்குல நீளமான அட்டைகளை தருவித்து
வைத்தியத்தில் பயன்படுத்துவதைக் காட்டினார்கள்.
படங்களும் பயணமும் அருமை...
Han!F R!fay said…
ரவி சார்... பழைய போஸ்ட் போல இருக்கே ?? இருந்தாலும்.. அருமை...
Anonymous said…
அடுத்த முறை போகும்போது உப்பு எடுத்து செல்லவும். அட்டை மீது உப்பு பட்டவுடன் அட்டை கரைந்து விடும்! சுத்தம் செய்யும்போது மட்டும் சிறு அருவெறுப்பு அவ்வளவே!
நல்ல பகிற்வு
இதை போல் நாங்களும் topslip யில் இருந்து forest யிடம் அனுமதி பெற்று சின்னார் என்னும் அடர்ந்த காட்டுக்கு சென்ர்ரோம்.
எங்களையும் பதம் பார்த்தது அட்டை.
அங்கு இருந்த இரண்டு நாள் என்னால் மறக்கவே முடியாதவை.

உங்கள் பதிவை பார்க்கும்போது மீண்டும் ட்ரக்கிங் போகனும் போல இருக்கு.
அண்ணாத்தே மீள்பதிவா!

ஏதோ நினைவுகள்
மனதிலே மலருதே

வேளச்சேரி குட்டிச்சுவரெல்லாம் நினைவுக்கு வருதே? :-)
Anonymous said…
சூப்பர் அனுபவம். படங்கள் அருமை.
V.Radhakrishnan said…
புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன், ஆனால் பிற கிரகத்திலிருந்து எல்லாம் உயிரினம் வந்திருக்கும் என்பது நிரூபிக்கப்படாத உண்மை. வைரஸ் ஒரு செல்லே அல்ல, ஆனால் அவை உயிர் கொல்லியாக இருக்கிறதே! எல்லாம் இங்கே இருந்தே உருவானது, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிய வண்ணம் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் எவரும் நம்புவதில்லை. நல்லதொரு பயணம்

Popular Posts