.
இணையத்தில் மட்டும் வீசும் திமுக எதிர்ப்பலை, இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாயிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, கொஞ்சம் கொலைவெறியோடு அலைகிறார்கள். அதற்கு பல காரணங்கள். பல நியாயங்கள். பல கற்பிதங்கள்.
ரசினிகோந்து வாய்ஸ் கொடுத்ததால் ஏமாந்து திமுக-தமாக கூட்டணிக்கு 96 அடியேன் ஓட்டு போட்டது வரலாற்று நிகழ்வு, அதை பற்றி அதிகம் வேண்டாம், ஆனால் இந்த முறை, திமுகவுக்கு ஓட்டு போடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
காரணங்களை கீழே அடுக்குறேன் !!!
சூப்பரா இருக்கு இதெல்லாம்.
1. கடந்த அதிமுக ஆட்சியின் ஹிட் திட்டங்களை (மகளிர் சுய உதவிக்குழு, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற பல) ஒழிக்காமல் அப்படியே செயல்படுத்தியது. அம்மா ஆட்சியில் உழவர் சந்தை, சமத்துவபுரம் திட்டங்கள் பொலிவிழந்துபோனது போல் இல்லாமல்.
2. மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை சுணங்கடிக்காமல் செயல்படுத்தி, கிராம அளவில் நல்ல பணப்புழக்கம் ஏற்பட வகைசெய்தது.
3. ஒரு ரூபாய் அரிசி ! இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி. வயிறும் மனசும் நிறையும் திட்டங்கள்.
4. கிராம குளங்கள் / ஏரிகள் தூர்வாறப்பட்டு, புதிய நீர் ஆதாரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
5. அரவாணிகள், நரிக்குறவர்கள் மேல் அக்கறையான நடவடிக்கைகள், தனி நல வாரியம் அமைத்தது.
6. அரசு பள்ளிகளில் கட்டணம் ரத்து, வாரத்தில் ஐந்து நாளும் முட்டை(புள்ளைங்களா, பாடத்துல இதை வாங்கிடாதீங்க) !
7. வீட்டு வசதி திட்டம் (முன்னால அவர் பெயரை சேர்த்துக்கோங்க. நான் அதிமுகக்காரன், அம்மாவுக்கு மொட்டை கடுதாசி போட்டுடுவாங்க)
8. இலவச மருத்துவ காப்பீடு
9. அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாத்தியார்கள் / டீச்சர்களுக்கு வழக்கம்போல சம்பள உயர்வு ( இவர் ஆட்சின்னாலே இவங்களுக்கு தனி குஷி தெரியுமா)
10. 108 ஆம்புலன்ஸ் சேவை. (நான் கூட ஒரு ஆக்ஸிடெண்ட் அப்போ போன் செய்தேன். அதி அவசர சேவை. வெரிகுட்)
11. இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள்
12. கனிமொழி தலைமையில் நடக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்கள். லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனராம்.
13. தேசிய கடல்வாழ் பல்கலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது.
14. புதிய பொறியியல், மருத்துவ கல்லூரிகள் அமைக்க சீரிய முயற்சிகள் ( கடலூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் வரப்போவுதாமே)
15. உடல் ஊனமுற்றோர் என்ற பதத்தை ஒழித்து மாற்றுதிறனாளிகள் என்று அழைக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தது
இன்னும் பல இருக்கு. தமிழகம் பல துறைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்குன்னு ஸ்டேட் சொல்லுது.
இனி, என்ன என்ன செய்யவேண்டிய தேவை :
தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதே பெரிய சாதனைதான். தொடர்ந்து இதனை கவனித்து, இந்த பெருமுதலாளிகள் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்துவிடாமல் காத்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
கள் இறக்க அனுமதி கொடுக்கவேண்டும். கள் என்பது உடலுக்கு ஊறு விளைவிக்காத சாதாரண சரக்கு. இதை ஏன் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் ? டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நாட்டில் கள்ளுக்கு ஏன் அனுமதி மறுக்கவேண்டும் ? புரியாத புதிர். இதில் பனைப்பொருள் நலவாரியத்துக்கு ஒரு உருப்புடாத கோயில்ல உண்டசோறு வாங்கி தின்ற குமரி அனந்தன் தலைவர். கொடுமை.
கிராம சாலைகள் எல்லாம் என்றைக்கு தான் சரியாகும் ? மத்திய அரசின் சாலைகள் எல்லாம் பள பளவென மாறிய பிறகும் நீங்கள் திருந்தவேண்டாமா ?
சேது சமுத்திர திட்டம், மத்திய அரசின் சட்டையை பிடித்து பெறவேண்டிய ஒன்று. விடவேண்டாம். வொர்க் ஹார்ட் !
ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடவேண்டும்
அனைத்து மக்களுக்கும் - குடும்ப அட்டைக்கு ஒன்று - என்று இலவச மொபைல் வழங்கிடவேண்டும். இதை விட மாநிலத்தை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறவைக்க ஒரு திட்டம் தேவையில்லை.
104 சேவை. குஜராத் அரசின் சிறப்பான திட்டம். 24 மணி நேரமும் மருத்துவரை அழைத்து காய்ச்சல் தலைவலி பெண்கள் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும் சொல்லி மருந்து கேட்கலாம். கண்டிப்பாக செயல்படுத்துங்கள், சூப்பர்ஹிட் ஆகும்.
ஆன்லைனில் வெப்சைட் ஆரம்பித்த துணைமுதல்வர், ஏன் மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடக்கூடாது ? ஜனநாயகத்துக்கு பெயர்போன(?) பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். நீங்களும் செய்யலாமே ?
சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஆபாசம், மூடநம்பிக்கைகளை சொல்லும் நிகழ்வுகளை தடுக்கவேண்டும்.
இந்த ஆர்டிஓ ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ்ல எல்லாம் லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு ஒரு போர்டு வைங்க. முடிந்தால் கர்நாடகாவில் இருப்பது போல ஒரு பவர்புல் லஞ்ச ஒழிப்பு துறையை (லோக் அயுக்தா) ஆரம்பிங்க. ட்ராபிக் ராமசாமியை இதுக்கு தலைவரா போட்டுடுங்க. அப்புறம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வேட்டி இன்ஸ்டண்டா உருவப்படும்.
தமிழகம் எங்கும் உள்ள தீண்டாமை / பாவச்செயல் / பெருங்குற்றங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நசுக்கவேண்டும். இங்கெல்லாம் காவல்துறை ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்கவேண்டும். ( உதா: திருச்சி தீண்டாமை கல்லறைகள்)
மலையாளிகள் அவர்களது சுற்றுலாத்துறையை எப்படி எப்படியோ பிரபலப்படுத்துகிறார்கள். எந்த நாட்டு இந்தியன் எம்பஸி போனாலும் அங்கே குமரகத்தில் மஸாஜ் செய்ய அழைக்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சென்னை ஏர்ப்போட்டில் இருந்தே ஆப்பு தான் காத்திருக்கிறது. தேவை எபக்ட்டிவ் மார்க்கெட்டிங் in சுற்றுலா துறை மற்றும் வரவேற்ப்புக்கு என்று தனி வாரியம் and படித்த ஊழியர்கள்.
கோபம் - இது சரியில்ல
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை இல்லாமை.
லஞ்ச ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாத நடவடிக்கை தேவை. சமூக சேவகர் என்று பொய் சொல்லி வீட்டு வசதி வாரிய நிலம் வாங்கி அப்பார்ட்மெண்ட் கட்டும் ஒரு அதிகாரி, முதல்வர் கையால் பதக்கம் வாங்கி குத்திக்கொள்கிறார். வெட்கக்கேடு.
கொலைவெறியொடு நடக்கும் மணல் கொள்ளை, நிலத்தடி நீரை பாதாளத்துக்கு தள்ளுகிறது. முந்தைய அதிமுக அரசில் கட்டாயமாக செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமே !
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது, அது ஒரு ரவுடி ராஜ்ஜியம் என்ற பெயரை தொடர்ந்து காத்துவருகிறது இந்த அரசு.
தலையை சொறிந்து சொறிந்து தமிழகத்தையே இருளில் மூழ்கடிக்கும் மின் தட்டுப்பாடு
சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களை காக்க லெட்டர் எழுதுவதை தவிர எதுவும் செய்யாதது
ஊடக ஏகாதிபத்தியம். சினிமா துறையிலும். ஏம்பா மீதி பேரும் கொஞ்சம் பொழைக்கட்டும் விடுங்களேன்.
மற்றபடி, பொதுவாக இது ஒரு சிறப்பான ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் திமுக அரசை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இப்படி நினைக்கலாம், (ஒருவேளை அதிமுக வென்று ஆட்சியில் அமர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைப்பார்கள், என்னடா, திமுக அவ்வளவு பணிகள் செய்தும் மக்கள் மாற்றித்தானே குத்தினார்கள், ஆக மக்கள் பணியை பார்க்காமல் மணியை தான் பார்க்கிறார்கள் என்று, ஆக ஒரு பணியும் நடைபெறாது.). விடுங்க அது சும்மா லூலுவாயி. முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதில்லையா ? அதுபோல சிறப்பாக செயல்படும் திமுக அரசை பாராட்டாமல் என்ன செய்ய ? ஆகவே என்னுடைய ஓட்டு திமுகவுக்கே.
ஆனால் பாவம் இந்த ஸ்டாலின். இவர் ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் தொடர, இவர் துணை முதல்வராகவே குப்பை கொட்டவேண்டியிருக்கும். பேசாம தமிழ்மணம் அல்லது பஸ் / ட்விட்டர் பக்கம் வந்திருங்களேன் ஸ்டாலின், ஓட்டு போட்டு லைக் பண்ணி ரீ ட்வீட் பண்றோம். கும்தலக்கடி கிரிகிரியா இருக்கும் !!!