Friday, October 05, 2007

ஆயா, தாத்தா,காதல், திராட்சை,ஆனல் ஆப்ஸஸ் !!!!

பெருசா எதுவும் இந்த பதிவில் எழுதி கிழிக்கப்போவதில்லைன்னாலும், இதை பதிவு செய்யனும்னு ரொம்பநாள் ஆசை...ஏதோ பேட்ஸ்மேன் வரிசை மாதிரி போட்டிருந்தாலும் மிடில் ஆர்டர்லருந்து வரேன்....

என்னுடைய தாத்தா தஞ்சை மாவட்டத்தில் விட்டேத்தியாக கிராமத்துக்குயில்களை மைனர் செயினோடு சைட்டடித்திருந்த காலம் அது...சமீபத்தில் ஒரு எண்பது தொன்னூறு வருஷம் முன்னால இருக்கும்....எழுபத்தைந்து வருஷம் வாழ்ந்து அவர் போய் சேர்ந்து பத்து பதினைந்து வருஷம் ஆகுது...அந்த காலத்திலேயே லவ் மேரேஞ் செஞ்ச அவரோட கதையை சொல்லிடறேனே இந்த பதிவில்...

சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்திக்கிட்டும், அந்த காலத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கிட்டும் இருந்த என்னுடைய கொள்ளுத்தாத்தாவுக்கு சில நூறுவேலி (600 வேலி - எவ்ளோ ஏக்கர்னு தெரியல), நிலமும் இரண்டு பிள்ளைகளும் சில பொண்டாட்டிகளும் இருந்தாங்க...முதல் மனைவியின் மூத்த பிள்ளை என்னுடைய தாத்தா...

விட்டேத்தியா திரிஞ்சிக்கிட்டிருந்தவருக்கு சுகந்திர போராட்டம், காந்தி, சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று யாரோ அறிமுகப்படுத்த, சற்றே தீவிரமாக அதில் இறங்கினார்..ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக தன்னுடைய நிலங்களை கொடுத்தும், பள்ளிகள் மருத்துவமனைகள், கிறிஸ்தவ ஆலயங்கள் அமைக்கவும் ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்த பெரிய தாத்தாவுக்கு இது சிறிதும் ஒப்பாத காரியம்...

வீட்டுக்குள்ளே வராதே என்று தடையுத்தரவு, சொத்தில் நயா பைசா கிடையாது என்ற மிரட்டல் எதற்கும் பணியவில்லை இவர்...

பிரச்சினையின் உச்சகட்டமாக தீவிரவாத குழுக்களோடு இணைந்து தஞ்சை பொது தபால் அலுவலகத்தை கொளுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றாலும், ஆங்கிலேய அதிகாரிகளிடம் பிடிபட்டார்...

அவர்கள் இவருக்கு அந்தமானுக்கு டிக்கெட் போடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சாக்கடை ஓட்டையோ, சந்துபொந்தோ, எப்படியோ தப்பித்து சில நூறு ரூபாய்களுடன் தன்னுடைய தூரத்து உறவு அத்தை இருக்கும் திருக்கோவிலூருக்கு வந்துசேர்ந்தார்...

தன்னுடைய தஞ்சை கிராமத்துபெயரான மேல்கரையை கொண்டு மேல்கரையார் என்று அழைக்கப்பட்ட இவர் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல...அதெல்லாம் பின்னால்...

கையில் இருந்த பணத்தை வைத்து சில ஏக்கர் நிலம் வாங்கி ( சில நூறு ரூபாய்க்கே) இங்கேயே செட்டில் ஆக திட்டம் போட்டார்...

அங்கே தஞ்சையில் ஆங்கிலேய அதிகாரிகளிடம் தன்னுடைய குடும்ப பிரச்சினையை சமாளிக்க ஜெயராஜ் என்ற இவரது பெயரில் இருந்த பணியாளர் ஒருவரை ஆஜர் படுத்தி பெரிய தாத்தா அவருக்கு சிறைத்தண்டனையும் பெற்றுக்கொடுத்து, தன்னுடைய மகனை காக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாலும், இந்த செயல் இவருக்கு சுத்தமாக பிடிக்காததால் தஞ்சையை சுத்தமாக மறந்தார்...

இப்போது திரு.ஜெயராஜ் அவர்கள் சுகந்திரபோராட்ட தியாகி பென்ஷன் மற்றும் அரசிடம் இருந்து சில ஏக்கர் நிலம் பெற்றதாக சில ஆண்டு முன்னால் கேள்விப்பட்டு க்ளுக் என்று சிரித்துக்கொண்டேன்..

இங்கே திருக்கோவிலூர் அருகேயுள்ள கிராமத்தில் தன்னுடைய அத்தை மகளின் அழகில் மயங்கி ஜொள் விட்ட என்னுடைய தாத்தா, தன்னை விட இரண்டு வயது மூத்தவராக இருந்தாலும் கும்பகோணம் வெற்றிலையும், ரவுக்கையும் ( அப்போதெல்லாம் கிராமத்து பெண்கள் ரவிக்கை அணிவது இல்லை) கொடுத்து ப்ரப்போஸ் செய்திருக்கிறார்...(அதை இருவரின் கடைசி காலம் வரை சொல்லி கிண்டல் செய்தேன்...)

இவரின் அதிரடியான அணுகுமுறையில் ஆப் ஆகிய ஆயாவும் ஓக்கே சொல்ல, பெரிய தாத்தாவின் அனுமதியின்றி திருமணத்துக்கு நாள் குறித்தார்...

பெரிய தாத்தாவின் கடைசி தூதர் கொண்டு வந்த செய்திக்கும் இவர் மசியவில்லை...

"நீ அந்த பெண்ணை திருமணம் செய்தால் சொத்து அனைத்தும் உன்னுடைய தம்பிக்குதான் போகும்..."

திருமணம் முடிந்தது...

இன்றைக்கு என்னுடைய சின்னத்தாத்தாவின் மகன் / மருமகன்கள் தஞ்சையில் மிகப்பெரிய வியாபார காந்தங்களாக இருக்கிறார்கள்...

மறுபடி ஸ்டோரிக்கு வருவோம்...

என்னுடைய தந்தையாருடன் சேந்து ஐந்து பிள்ளைகள் இவர்களுக்கு...இரண்டு பெண்கள் தவிர மீதி மூவரில் இருவர் காவல் துறை, ஒருவர் ராணுவம் என்று பணியில் இணைந்தாலும், இவர்கள் இவர்களுடைய தாயார், அதாவது என்னுடைய ஆயா மேல் வைத்துள்ள பாசம் சொல்லி மாளாது....அவர் உயிருடன் இருந்தவரை தினமும் அவரை கவனித்த விதம் - அய்யோ...

ஜீப்பில் இருந்து இறங்கியதும் "யம்மா" என்று கத்திக்கொண்டே உள்ளே நுழையும் காவல் உயரதிகாரி...

எங்கம்மாவுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன் என்று வரும் - என் தந்தையாரின் இளவல் - மற்றொரு காவல் அதிகாரி...

அம்மா, ஆரஞ்சு முட்டாய் வாங்கிட்டு வந்திருக்கேன் என்று கிலோமீட்டர் கணக்காக பயணம் செய்து வரும் ஆரஞ்சு மிட்டாய்...என்னுடைய தந்தையாரின் மூத்த சகோதரர்...ராணுவ மேஜர்...இவருடைய துப்பாக்கியை வைத்து நான் ஒரு கூத்து செய்தேன், அதை பிறகு சொல்கிறேன்...

வாஸ்துப்படி வீட்டை இடித்து முன் வாசல் மாற்றியபோது, எங்கம்மாவுக்கு க்விண் பெட், ஜன்னல் தனியா பெட்டுக்கு பக்கத்துல வரனும், அந்தப்பக்கம் பூந்தொட்டிங்க வெச்சு அதுல இருந்து வாசனை வரனும் என்று ஓவர் டார்ச்சர் செய்தார்...

"அப்பா, தனி ஆளுக்கு எதுக்குப்பா க்வீன் பெட்" என்ற போது..

"அடி பிச்சுருவேன் ராஸ்கல்...எங்கம்மா கைய காலை நீட்டும்...நான் வந்து உக்காருவேன்...நீ ஏண்டா எரிஞ்சுக்கற" என்றார்...

ஆயாவின் மறைவுக்குப்பின் - சில நாட்களுக்கு பின் - அதன் இடது பக்க ஜன்னல் ஓரம் ஒரு திராட்சை செடி முளைத்தது...

செடி, கொடிகள், மூலிகை என்று எல்லா விஷயங்களிலும் ஆர்வம் உள்ள என்னுடைய தந்தையார், அது திராட்சை செடி என்று உடனே கண்டுபிடித்து பந்தல் போட்டு வளர்த்தார்...

அருமையாக ஒரு திராட்சை கொத்து வளர்ந்தது...

எல்லாரும் வீட்டில் கூடியிருந்தபோது, தோட்டத்துப்பக்கம் போன நான் திராட்சை கொத்தை காணவில்லை என்று வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது....

"அங்கே பார்" என்றான் என் அண்ணன்...எங்கடா...என்றேன்..."மேலே பார்.."..ஆயா போட்டோகிட்டே பார்...என்று ரஜினி வாய்ஸ் கொடுத்தான்...

ஆயா போட்டோவுக்கு பக்கத்தில் திராட்சை கொத்து சிரித்துக்கொண்டிருந்தது...

காரணம் அப்பா...

என்னப்பா இது...என்றேன்...

ஹும்...எங்கம்மாவுக்கு தான் திராட்சை...என்றார்...

என்ன பாசம்...ஏனோ அன்றைக்கு இரவு கண்ணீர் வந்தது...எப்போதும் என்னுடைய தாயார் மீது எரிந்து விழும் என்னுடைய ஆட்டிட்டியூட் மாறியது அந்த சம்பவத்துக்கு பிறகு...

இப்போ கொரியாவுக்கு வரேன்...

பதினைந்து நாளைக்கு முன்னால் "தன்னிலை விளக்கம்" என்று ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்தபோது இடுப்பில் பயங்கர வலி...

என்னுடைய டீம் மெம்பர்கள் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டுபோய் "ஹீ ம்யாங் - ப்யாங் வான்" (ப்யாங் வான் என்றால் கொரியன் மொழியில் ஆஸ்பத்திரி) - கொண்டுபோனார்கள்...

இடுப்பில் எலும்புக்கு கீழே ஆப்ஸஸ் / பிஸ் / நோய் தொற்று கிருமிகள் மொத்தமாக சேர்ந்திருப்பதாகவும், உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் உடைந்த ஆங்கிலத்தில் டாக்டர் லீ சொல்ல...

நொந்தேன்...

சோனோகிராபி, சி.டி ஸ்கேன், ஆசனவாயில் குழாயை வைத்து கொன்று எடுத்தார்கள்...

ஆப்பரேஷன் போது, அனஸ்தீசியாவாம் - இடுப்பு எலும்பில் ஊசி ஒன்றை சொருகியபோது உயிரே போகும்படி வலி...

இந்த நாட்டின் மருத்துவ முறைகள், ஊசி போடும் முறை, எப்போதும் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ப்ராஸஸ், ஒரு வேளைக்கு பதினைந்து இருபது மாத்திரைகள் என்று பத்து நாள் ஒரே இடத்தில் மொழி புரியாத நர்சுகளிடம் எனக்கு தெரிந்த அரைகுறை கொரிய மொழியை வைத்து சமாளித்து, டப்பாவில் யூரின் போய் அதை நானே கொண்டு போய் ஊற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, கிட்டத்தட்ட செத்துப்பிழைத்து வந்திருக்கிறேன்...

ஒரு முறை மருத்துவமனையில் பணம் ட்ரான்ஸபர் செய்யவேண்டும் என்று டாக்டரிடம் விளக்கி இண்டர்நெட் பெற்று ஐந்து நிமிடம் படுத்தபடி சிலருக்கு மடலும், ட்ரான்ஸ்பரும் செய்தேன்...

தேறி வரும் வேளையில் அது பற்றி லக்கியின் பதிவு படிக்க நேர்ந்து வலித்தாலும் பரவாயில்லை என்று சிரித்தேன்..

பதினைந்து நாட்கள் படுத்து எழுந்து வந்து பார்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்...!!!!!!

ட்வெண்டி ட்வெண்டி வின், போலி பிரச்சினை முடிவு, கலைஞர் பற்றி ஞானி, ஆஸ்திரேலியா சீரிஸ் மூன்றாவது மேட்ச் தோல்வி...ஹும்...

இந்த சமயத்தில் நான் நலம் பெற வேண்டும் என்று பின்னூட்டமும் மடலும் அனுப்பிய அனைவருக்கும் நன்றி !!!!!!!!! முடிந்தால் இன்னும் ஓரிரு நாளில் எழுதுகிறேன்...

20 comments:

Jayaprakash Sampath said...

கடவுளே... இவ்ளோ சிக்கலாயிடுச்சா? அதும் பாஷை தெரியாத ஊருக்குப் போன நேரம் பாத்து?

எல்லாம் சரியாயிரும்..டோண்ட் ஒர்ரி

ILA (a) இளா said...

நல்லா இருடே..

PPattian said...

தாத்தா, ஆயா ஸ்டோரி டச்சிங்...

நலம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

மாசிலா said...

ரவி உங்களுக்கு சின்னதா எழுத வராதா?

நான் உங்க பதிவ படிக்கல. ரொம்ப நீட்டா இருக்குது!

அதுவும் ஆயா தாத்தா காதல்னு கும்மியடிக்க வந்தாக்கா ...

;-D

உண்மைத்தமிழன் said...

எல்லாமே நல்லதொரு அனுபவமாக இருக்கட்டும். ஏன் நோய் வந்தது என்பதைக் கண்டறிந்து இனி எங்கே சென்றாலும் அதைப் பின்பற்றாமல் நீடுழி வாழ்க..

நாமக்கல் சிபி said...

ரவி,

நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வாங்க!

டேக் கேர்!

முரளிகண்ணன் said...

get well soon

வவ்வால் said...

ரவி,

விரைவில் குணம் அடைவீர்கள்! உங்களைப்போன்று உற்சாகம் குறையாமல் இருப்பவர்களுக்கு இதெல்லாம் கொசுக்கடி போல தான்!உடல் நிலை சரி இல்லாத போது வெளியூரில் மாட்டிக்கொள்வது தான் பெரிய பிரச்சினை.எப்படியாவது சமாளித்து வாருங்கள்!

குசும்பன் said...

நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வாங்க!

கும்மி அடிக்கலாம்:)))

லக்கிலுக் said...

அனானி ஆப்ஷன் தொறந்தா கும்மி அடிக்க வசதியா இருக்கும்!

முத்துகுமரன் said...

உடல்நலனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் ஓய்வை எடுத்துகொள்ளுங்கள்.

ஜே கே | J K said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

ஜே கே | J K said...

குணமானதும் சீக்கிரம் வாங்க கும்மிக்கு.. :)))

siva gnanamji(#18100882083107547329) said...

ஒருவேலி=6 2/3 ஏக்கர்
600 வேலி=600x20/3=4000 ஏக்கர்

ரவி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...!!!!!!!!!!!

கானா பிரபா said...

ரவி

இப்போது தான் விபரமாகத் தெரிந்து கொண்டேன், உடம்பைக் கவனிக்கவும். பூரண சுகம் பெற வேண்டுகின்றேன்.

ரவி said...

நன்றி பிரபா....

Boston Bala said...

துள்ளியெழுந்து வந்தது பார்த்து மகிழ்ச்சி :)

ஜமாலன் said...

நண்பருக்கு...

உங்கள் பெயரில் எனக்கு சில பின்னோட்டங்கள் வருகிறது. ஆனால் லிங்கில் இல்லாமல். அது நீங்கள்தானா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் ஆபாசமாகவும் வருகிறது. இதனை நீங்கள் எனக்கு தெளிவுபடுத்தினால் நல்லது. இன்றுவந்த பின்னோட்டம் ஓ.கே. என்பதால் அதனை வெளியிட்டுள்ளேன்.
வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

நட்புடன்
ஜமாலன்.

ரவி said...

பின்னூட்டத்துக்கு நன்றி பாபா...இன்னும் தவ்வித்தான் போய்க்கிட்டிருக்கேன்... :)))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....