தேடுங்க !

Monday, April 27, 2009

ஈழ அகதிகளும் திபெத் அகதிகளும்

முதலில் அகதி என்ற சொல்லே அருவருப்பை தருகிறது எனக்கு...!!!! இன்றைக்கு உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்திய ????? கலைஞர் ஆட்சி கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் நடந்துவரும் சூழலில், இதை பற்றி சிந்தையே எவருக்கும் எழாதது ஏனோ ? தமிழர் தலைவர் வீரமணி எங்கே ? பாட்டாளி தலைவர் இராமதாசு எங்கே ? ஆட்சி அதிகாரங்களில் சுகமாக அமர்ந்துகொண்டு மானாட மயிலாட ரசித்துக்கொண்டிருகும் இவர்களின் இந்த பொறுப்பற்ற தன்மை இவர்கள் மேல் கடும் கோபத்தை உருவாக்குகிறது...!!!!முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்

ஆய்வுக்குழு, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்

மூலம் > http://www.keetru.com/vizhippunarvu/sep06/students

சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வரும் ஈழ அகதிகள் பற்றி, அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசின் சலுகைகள் பற்றி ஆராய்வதற்காக தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டோம். மேலும், கர்நாடகாவில் உள்ள திபெத்திய அகதிகள் முகாமையும் பார்வையிட்டோம். (முறையே 27-07-06 அன்று மண்டபம் முகாம், 3-8-06 அன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள திபெத்திய அகதிகள் முகாமையும், 4.8.06 அன்று கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஈழ அகதிகள் முகாமையும் பார்வையிட்டோம்)

அதன்படி ஈழத்தமிழ் அகதிகளுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இந்திய நடுவன் அரசு செய்யும் சலுகைகளைப் பற்றியும், கொடுக்கும் சிறப்புகளைப் பற்றியும் எங்களுடைய குமுறல்களை மானமுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு ஒப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். (மண்டபம் முகாமில் உள்ள ஊழியர்களின் கடுமையான நடவடிக்கை காரணமாக புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. காரணம் புகைப்படத்தில் உள்ள வீடுகளையோ, முகங்களையோ கண்டுபிடித்து அவர்களை மனரீதியாகவோ மற்றும் உடல் ரீதியாகவோ துன்புறுத்துகின்றனர் காவல் துறையினர். எனவே நாங்கள் புகைப்படம் எடுக்க வில்லை). எனவே, நாங்கள் மற்ற முகாம்களில் உள்ள அவலங்களையும், திபெத்திய முகாமில் உள்ள நிலையினையும், புகைப்படங்களையும் ஆதாரமாக வைக்கின்றோம்.

திபெத்திய அகதிகள்

அகதிகள் எண்ணிக்கை

 ஒரு முகாம் (22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 5,232 அகதிகள் உள்ளனர்.

வாழ்விடம்

 தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்).

சுகாதார வசதி

 தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை (5 மருத்துவர்கள், 15 செவியர்களுடன் இயக்கப்படுகிறது)

 அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறை

கலாச்சாரம்

 ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. (நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அது குட்டி திபெத் போல் தெரிந்தது)

மத சுதந்திரம்

 தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் (சுமார் பரப்பளவு 1 ஏக்கர் நிலத்தில்)

 தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,

 அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,

 தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட

கல்வி

 சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.

 பின் 11, 12 படிக்க அரசே உதவி செய்து சிம்லா அனுப்பி வைக்கிறது. (அனைத்து செலவுகளையும் ஏற்று)

 மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. (அரசு செலவுடன்)

 திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அகதிகள் என்ற முத்திரையுடன்.

விவசாய நிலம்

 மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு

 தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது.

 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள்.

வங்கி

 மொத்தம் நான்கு வகையான வங்கிகள்

 சிண்டிகேட் வங்கி

 ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்

 கூட்டுறவு வங்கி

 வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

 சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

 அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி

 குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஆய்வு

 திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

 இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress

 மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.

 அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி

 அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.

 வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.

 கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

திபெத் அகதிகள் முகாம் படங்கள்

*********

ஈழத்தமிழ் அகதிகள்

அகதிகள் எண்ணிக்கை

 மொத்தம் 103 முகாம்கள் உள்ளன.

 ஏழத்தாழ 75,000க்கும் மேல உள்ளனர்.

 (தினந்தோறும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டு இருக்கின்றனர்).

வாழ்விடம்

 அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள்.

 90% வீடுகளில் மின்சாரமே இல்லை.

 பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

சுகாதார வசதி

 அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்று பார்த்துக் கொள்ளலாம்.

 பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.

 பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை.

கலாச்சாரம்

 அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம். அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்.

மத சுதந்திரம்

 மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்த்தது எங்கள் அறியாமையே.

கல்வி

 அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாக சொல்கிறது. மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ளது.

 ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

 பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது.

 உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது (வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியுண்டாம். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்)

விவசாய நிலம்

 குடியிருக்க இடம் கொடுக்காத நாட்டில் விவசாய நிலம் கேட்பது நம் முட்டாள்தனம் தான்.

தகவல் தொடர்பு

 நாட்டுப் பிரச்சனைகள் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் இதற்கு முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும்.

வங்கி

 சாப்பாட்டிற்கு வழியில்லாதவர்களுக்கு வங்கியைப் பற்றி பேச அருகதை இல்லை.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

 மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி.

 மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

 கடுமையான நிபந்தனையுடன்.

பண உதவி மற்றும் பொருளுதவி

 குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழக்கப்படுகின்றது.

ஆய்வு

  மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடைபெறுகிறது.

 ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றி (ஈழம்) பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஈழ அகதிகள் முகாம் படங்கள்

**********

கோரிக்கைகள்

 முதல் மைய அரசு திபெத்திய அகதிகளை நாட்டுப் பிரச்சனையாகவும், ஈழத் தமிழர்களையும் இனப்பிரச்சனையாகவும் பார்த்து வேறுபடுத்துவதை நிறுத்த வேண்டும்.

 இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு - 14, உறுப்பு - 21 வலியுறுத்தும் சாதாரண வாழ்வுரிமையானது இந்த தமிழ் அகதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்கு திபெத்தியர்கள் போல் வாழ்வினைக் கொடுக்க முடியவில்லையென்றாலும், அடிப்படை வாழ்வாதாரமாவது வழங்கப்பட வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்குத் தேவையான உணவு, உடை இருப்பிடம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மைய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

 2003 ஆம் அண்டு உயர்நீதி மன்றங்கள் அளித்த ஈழத் தமிழர்களுக்கான உயர்கல்வி இடஒதுக்கீடு பெறுவதற்கான தடையினை நீக்கி, மீண்டும் அவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

 அவர்கள் கலாச்சாரத்திலும், உடையிலும் இங்குள்ள காவல்துறையினர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் பற்றியும் அங்கு என்ன நடக்கிறது என்று தகவல் வெளியிட வேண்டும்.

 முகாமுக்கு வரும் அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வீடுகள் ஒதுக்குவதையும், கெட்ட வார்த்தையால் திட்டுவதையும், பெண்களை பாலியல் ரீதியாக சொந்தரவு செய்வதையும் முகாமில் உள்ள அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அத்தகைய அதிகாரிகளை கண்டுபிடித்து உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் படகு கவிழ்ந்து பலியாவதையும், இலங்கை இராணுவத்தால் பிடிபட்டால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவதையும், வரும் படகுக்கு ரூ.10,000, ரூ.20,000 என்று வசூல் செய்வதையும் தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய நடுவன் அரசு இலங்கையில் உள்ள அகதிகளை பாதுகாப்பாக தமிழகத்திற்கு கூட்டி வருதல் வேண்டும்.

 காவல்துறை ஆய்வின் போது அதிகாரிகள் தமிழ் அகதிகள் கொண்டு வரும் பொருட்களை அபகரிப்பதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 ஈழ அகதிகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை விட்டுவிட்டு திபெத்திய அகதிகளைப் போல் தமிழர்களை பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையை பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாததினை அளிக்க வேண்டும்.

இப்படிக்கு, ஆய்வுக்குழு, கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்...

6 comments:

அதிஷா said...

இந்த பதிவை எனது வலைப்பூவிலும் ஏற்றிட உங்களது அனுமதி வேண்டும்..

முடிந்தால் படங்களையும் அனுப்பினால் அதையும் இணைத்து விடுகிறேன்.

லக்கிலுக் said...

//தமிழர் தலைவர் வீரமணி எங்கே ? பாட்டாளி தலைவர் இராமதாசு எங்கே ? //

கன்ஃபைட் காஞ்சனா, ஹெலிகாப்டர் புகழ் அம்மா எங்கே?

குறும்பன் said...

//தமிழர் தலைவர் வீரமணி எங்கே ?

சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுக்க போயிருப்பார்.

//கன்ஃபைட் காஞ்சனா, ஹெலிகாப்டர் புகழ் அம்மா எங்கே?//

தமிழர் தலைவர் வீரமணி தரும் சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் வாங்க போயிருப்பார்.


சுயமரியாதை புலி மன்னிக்க சிங்கம் தமிழின காவலர் எங்கே? ஒன்னா இரண்டா அவருக்கு நிறைய வேலை.


தமிழன்னா இரண்டாம் பட்சம் தான்.. கொடுமை...

தமிழ் வெங்கட் said...

புரட்சி தலைவியை ஏன் விட்டுவிட்டீர்கள்...பயமா..?

ஊர் சுற்றி said...

ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக்கொள்ளும் நம் தலைவர்கள் இவர்களுக்காக என்ன செய்தார்கள் என்பது எல்லோரும் கேட்கவேண்டிய கேள்வி... இந்த கேள்வியை நீங்கள் இன்னொரு இடுகையிலும் கேட்டிருக்கிறீர்கள். நன்றி.

கண்ட கண்ட குப்பை படத்துக்கெல்லாம் வரிச்சலுகை குடுக்குறோம், நம்பள நம்பி வந்தவங்களுக்கு வாய்க்கு கஞ்சி குடுக்க - என்னா அலப்பறை...

ஆனா இதையெல்லாம் சொன்னா நம்மள பைத்தியக்காரன் -ம்பாங்க!

மணிகண்டன் said...

நான் திபெத்திய முகாம்களை பார்த்திருக்கிறேன். மிகவும் ரசனையுடன், சகலவித வசதிகளுடன் இருக்கும் வாழ்விடம். அவர்களின் ஒரே கவலை - அவரின் நாட்டினை விட்டு வேறு இடத்தில வசிப்பது மட்டுமே.

இங்கே மண்டப முகாமை பற்றி வரும் செய்திகளை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. தேவ....... பச..... - ஒருவித உதவியும் செய்யறது இல்லை. எதை எடுத்தாலும் அகதிகள் புலிகளின் ஆதரவாளர் என்ற ஒரு மாயை எற்படுத்தபடுகிறது. தீவிரவாதத்தில் இறங்கிவிடுவர் என்ற பொய் பரப்புரை. அதை தவிர அனைத்து அரசுதுறையிலும் மலிந்து இருக்கும் corruption.

இது இன்று / நேற்று இருக்கும் சூழல் அல்ல. பல வருடங்களாகவே இருக்கும் கொடுமை. இது போன்ற பதிவுகளில் "இன்னான்ற" ஸ்டைல்ல எழுதுவதை குறைத்துக்கொள்ளலாம்.இல்லையென்றால் கட்சி தொண்டர்களின் தொல்லை மட்டுமே மிஞ்சும். எதாவது மையின் ஸ்ட்ரீம் மீடியாவில் வெளிவர வேண்டிய அலசல்.