முடி திருத்தும் நிலையம்..எங்கள் ஊர் பக்கம் உள்ள சலூன் கடை பெரியவர், திருவிழாக்களில் நாயனம் வாசிப்பார். அதிகம் வேலை இல்லாத மதிய நேரங்களில் "சானை பிடிக்கறது.." என்று டயர் இல்லாத சைக்கிள் ரிம்மும் பெடலுமுடன் கூடிய சானை பிடிக்கும் மிஷினை தூக்கிக்கொண்டும் சுற்றுவார். சில சமயங்களில் வீட்டுக்கே அவரது கத்தரியும் சில்வர் கிண்ணமும் உள்ள அழுக்கு கைப்பையை தூக்கிக்கொண்டு வந்துவிடுவதுண்டு. அதிகபட்சம் ஐந்து ரூபாய்.

கல்லூரி காலத்தில் எல்லாம், முடியை கொஞ்சம் ஸ்டைலாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்து, சலூன் கடை விசிட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...

அங்கே கீழே விழும் முடிகளை கூட்டி வாரும் பையனிடம் ஒரு டீ வாங்கி வர சொல்லிவிட்டு, அப்படியே ட்ராயரை திறந்து சீப்பை எடுத்து தலையை வாறு வாறு என்று வாறும் நாட்கள் வந்தபோது, சலூனில் பெரியவர் போய், அவர் பையன் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்..

வீட்டில் முப்பது ரூபாயை கேட்டு வாங்கிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ரெண்டு வாரம் முன்னாலதான முப்பது ரூபாய் கொடுத்தேன் ? என்ற வெளிப்படையான கேள்விகளும், இவன் அங்கே போறதே சிகரெட்டு அடிக்கத்தான் என்ற மறைமுக சிந்தனைகளுக்கும்பிறகு, அந்த முப்பது ரூபாய் நம் பாக்கெட்டில் வரும்...

கடையிலோ, லைட்டா கட் பண்ணிரு. பேக்ல கொஞ்சம் மேல ஏத்தி. போன்ற ஆரம்பகட்ட பேச்சுகளுக்கப்புறம், இருவத்தஞ்சு ரூவா ஹேர் கட்டிங்குக்கு, அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் அப்புறம் ஒரு ஷாம்பு, என்ற நமது கால்குலேஷன்களை உடைக்கவே பிறப்பெடுத்தது போல, ஷேவ் பண்ணலியா சார் ? என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை எப்படி கொடுக்கமுடியும் ? இல்ல, செல்ப் ஷேவிங் ஆரம்பிச்சுட்டேன் மகேசு. வேண்டாம். வேண்டாம்னா விடேன். முடியலைடா சாமீ...

சில சமயம் ஷேவிங்கும் செய்வதுண்டு. அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ. மெட்ராஸ் போறீங்களா ? ஆமாம். கம்பெனிக்காரன் கேட்கிற கேள்விகளை தவிர எல்லா கேள்விகளும் கேட்கப்படும். இன்பர்மேஷன் ஈஸ் வெல்த். ஆப்போசிட் போடவா சார் ? வேண்டாம். அப்புறம் தாடி அதிகமாக வளரும் போன்ற மூட நம்பிக்கைகள்.

புது ப்ளேடு தானே ? ஆமாம் சார். இப்பத்தான் போட்டேன். உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க, இப்பவே மாத்துறேன்...இல்ல, எய்ட்ஸ் வருதுங்கறாங்க..வழித்து வழித்து, கையில் வைத்துக்கொண்டு, ஷேவிங் முடியும்வரை. அந்த கையில் எப்படித்தால் இவ்வளவு நுரையும் புகுந்து அடங்குகிறதோ ?

முகத்தில் எட்டுக்கால் பூச்சி மாதிரி அந்த நுரைக்கையை வைத்துக்கொண்டு, அந்த உள்ளங்கையில் இருக்கும் முடியும் ஷேவிங் க்ரீமும் கலந்த கலவை முகத்தில் மறுபடி ஒட்டுமோ போன்ற அவநம்பிக்கைகள், கழுத்துக்கு கீழே சரியாக கத்தி போகும்போது போகும்போது, எங்கே போன முறை டிப்ஸ் கொடுக்காமைக்கு இந்த முறை இழுத்து வெட்டிவிடுவானோ போன்ற பயங்களுடன் முடியும் ஷேவிங்.

மெஷின் கட்டிங் என்பது இன்னும் எளிமை. மெஷினை ஆன் செய்தவுடன் அதில் இருக்கும் பல்போன்ற அமைப்பு அப்படியே வழித்து எடுக்கும். கடலூர் புனித வளனார் பள்ளி உள்விடுதியில் வரிசையில் அமர்ந்து டோக்கனை கொடுத்து வழித்துக்கொண்டு வந்தது நியாபகத்தில் அலையடிக்கிறது...

பெங்களூரில் இருக்கும் சலூன்களின் செய்வது போல ஹெட் மசாஜ் தமிழகத்தில் செய்து பார்க்கவில்லை. கட்டிங் முடிந்தவுடன் டங்கிரி டங்கிரி என்று போட்டு அடித்து இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு நடு மண்டையில் குவிந்து வருமாறு மசாஜ் செய்வார்கள். முடிவெட்ட ஆகும் அதே காசு. எக்ஸ்ட்ரா வாங்கியதாக நினைவில்லை.

ஹீட்டர் போட்டால் அதிகம் செலவாகும் என்று ரொம்ப நாளைக்கு பயம். அப்புறம் பத்து ரூபாய் தான் அதிகம் ஆகும் என்று தெரிந்தபிறகு ஸ்ஸ்ஸ்ஸ். ஹீட்டருடன் கூடிய மசாஜ் சிறப்பு. ஆனால் அந்த டர்ர்ர் சத்தத்தில் கொஞ்சம்போல வரும் தலைவலி எக்ஸ்ட்ரா பிட்டிங்.

சார், அக்குள்ள ஷேவ் பண்ணவா என்று கேட்கும்போது கொஞ்சம் கூச்சத்தோடு, இல்ல நானே பண்ணிக்கறேன்..சில பேர் அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்து பார்க்கும் எனக்கு ஒரு வகை வாந்தி சென்சேஷன். அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.

ஷேவ் பண்ணிக்கொண்டிருக்கும்போதோ, அல்லது ஹேர்கட் செய்துகொண்டிருக்கும்போதோ, அலைபேசி அழைப்பை எடுத்து, சலூன்ல இருக்கேன் மச்சி என்று ஆரம்பித்து பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வந்துவிடும்.

கடைக்குள்ளே நுழையும்போது எல்லா வெயிட்டிங் சேர்களும் யாரையாவது கொண்டிருக்க, சரி நான் அப்புறமா வரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட முடியாது. இந்தா முடிஞ்சுருச்சு சார். டூ மினிட்ஸ். என்று எப்படியாவது கஸ்டமரை உள்ளே அமரவைக்க அவர்கள் படும் பாடு. யார் கண்டது, வெயிட்டிங் சேரில் இருக்கும் எல்லாரும் முடி வெட்டிக்கொள்ள வந்தவர்களாயிருக்காது. வட்டிக் கடை கடன்காரனாக கூட இருக்கலாமோ ?

"இங்கே அரசியல் பேசாதீர்" என்று கண்ணாடியில் சிவப்பு பெயிண்ட் எழுத்தில் ஒரு சலூனில் பார்த்திருக்கிறேன். அரசியல் அதே போன்றதொரு கண்ணாடியை உடைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்...

சேரில் உட்கார்ந்து கட்டிங் ஆரம்பித்தவுடன், எதிரில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி. இதுவரை எனக்கு முடி வெட்டுவதை சரியாக பார்த்ததில்லை...

மனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!!! வாழ்க நீ எம்மான்..!!!
.
.
.

Comments

sriram said…
என்ன இன்னிக்கு பயங்கர வெட்டியா?
மணிக்கு ஒரு இடுகை வருது?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரவி said…
இல்லை ஸ்ரீராம். சாப்ட்வேர் பில்டு ஆகுது. ரெண்டு மணி நேரமாவது எடுக்கும்..மேனுவலாக எதுவும் செய்யமுடியாது..அதான் இப்படி ஹி ஹி.

பதிவை பற்றி எதுவும் சொல்லலியே ?
// ஷேவ் பண்ணலியா சார் ? என்ற //
எனக்கு இதோட மேலும் ஒரு பிரச்சினை” டை அடிக்கலியா... என்ற ஒவ்வொருமுறையும் கேள்வி வரும்..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
//மனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!!!//

வாழ்க நீ எம்மான்..!!!
நானும் சலூனுக்கு போனால் பிளேடு மாற்றும்
பொழுது கவனிப்பேன், நல்ல பகிர்வு ரவி ஜி.
எனக்கும் ஒரு சலூன் கடை கொசுவத்தி இருக்கு, ரவி.

நேரம் கிடைக்கும் போது சுத்தணும். ஆனா, இந்த மாதிரி சூப்பரா வருமான்னு தெரியல...
ஜோ/Joe said…
நல்ல ஒரு வாசிப்பனுபவம்.
ரவி said…
நன்றி அரவிந்தன்....!!!
ரவி said…
உங்க தலையை பார்த்தும் அந்த கொஸ்டின் கேக்கலைன்னாதான் வருத்தம் ஹி ஹி..
ரவி said…
நன்றி டிவிஆர் அய்யா....
ரவி said…
நன்றி ஜெட்லி........
ரவி said…
நன்றி பீர். சீக்கிரம் சுத்துங்க...
ரவி said…
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ஜோ
நல்ல நினைவலைகள். சலூனில் இருக்கும் படங்களை விட்டு விட்டீர்களே?

தலை மசாஜ் பிலானியில் நடக்கும். முதல் முறையாக அதை எதிர்பார்க்காமல் என்னடா அடிக்கறான் என்று பயந்ததுண்டு. பெங்களூரில் எனக்கு நடக்கவில்லையே தலை மசாஜ். மஞ்சுநாத நகரில் அதெல்லாம் இல்லை.
Santhosh said…
ரவி,
நல்லா இருந்தது கொசுவத்தி சுருள், நானும் ஒரு ரெண்டு நிமிசம் எனக்கு புடிச்ச சலூன் கடைக்கு போயிட்டு வந்துட்டேன்னா பாத்துகோயேன்..
Santhosh said…
ரவி,
நல்லா இருந்தது கொசுவத்தி சுருள், நானும் ஒரு ரெண்டு நிமிசம் எனக்கு புடிச்ச சலூன் கடைக்கு போயிட்டு வந்துட்டேன்னா பாத்துகோயேன்..
ரவி said…
நன்றி நாகு !!!!
ரவி said…
டாங்கியூ சந்தோஷ்,,,,,,,,
Nat Sriram said…
அருமையான பதிவு ரவி..ஒரு பதிவு நிஜத்துக்கு க்ளோஸ்-ஆக இருந்தால் அதன் வாசிப்பனுபவமே தனி தான்.
//ஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.//
இது போன்ற பல வரிகள் சிக்ஸர்..வெரி வெரி true...
இன்னும் நெறைய சொல்லலாம்..சலூனுக்கே உள்ள ஒரு விதமான முடி, after shave, தினத்தந்தி எல்லாம் கலந்த வாசனை, நவரத்னா தைலத்தை தவிர மற்ற அனைத்தும் சுத்தமாக நமக்கு தெரியாத சிகை பிராண்டுகள், சலூன் வர்த்தகத்தை நம்பியே அச்சடிக்கப்படும் ஜெமினி சினிமா (இன்னும் வருகிறதா?) போன்றவை, பொட்டில் அடித்தார் போல் "சார், உங்களுக்கு முடி டென்சிட்டி கம்மி சார், இதுக்கு மேல ஷார்ட் பண்ண முடியாது" என்று உண்மையை சொல்லும் சலூன்காரர்கள்..

ஆங் அப்புறம், அக்குள் சேவிங் என்பது கிட்டத்தட்ட வழகொழிந்து போயாச்சு. "அக்குள் சேவிங் கிடையாது"ன்னு இபோல்லாம் ஸ்டிக்கர்-ஏ ரெடிமேடாக ஒட்டி விடுகிறார்கள்.
I did not know you could write so well. Nice one.
நல்ல அனுபவப்பதிவு

இப்ப இருக்கிர இட ஒதுக்கீட்ல இவங்களுக்கெல்லாம் நம்மள வேலை கிடைக்குமா?
குடுகுடுப்பை said...

நல்ல அனுபவப்பதிவு

இப்ப இருக்கிர இட ஒதுக்கீட்ல இவங்களுக்கெல்லாம் நம்மள வேலை கிடைக்குமா?//

இல்லை நாமளே நம்ம பிள்ளைங்களுக்கு இட ஒதுக்கீட வாங்கிட்டு அவங்களும் இந்த மாதிரி பதிவு போடுவாங்களா
ரவி said…
நன்றி நட்ஸ். கசங்கல் தினந்தந்தி சப்ளிமெண்ட் வாசனை ? :)) ஸ்டிக்கெர் எல்லாம் ஒட்றாங்களா ? எங்கூர்ல கிடையாது...
ரவி said…
நன்றி சிரில்..!!
ரவி said…
குஜமுக தலைவர் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியலை...
Kuberan said…
Nice Post...
Reflecting same experience....

Keep it up

Kuberan R
ரவி said…
நன்றி குபேரன்
நல்லா எழுதி இருக்கீங்க ரவி.
அருமையான அனுபவப் பதிவு. இப்படி ஒன்றுவிடாமல் சரளமாக எழுதுவது எல்லோருக்கும் வராது. மறைந்த சுஜாதாவும் இப்படித்தான் எல்லாவற்றையும் மறக்காமல் எழுவார். அவை எல்லோருக்கும் ஒத்துவரும். அவரின் ஞாபகம் வந்துவிட்டது. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
இட ஒதுக்கீட்டின் மூலம் நாமளே,நம்ம வாரிசுகளுக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, இந்த மாதிரி குலத்தொழிலா இந்த வேலைகளை காலம் ,காலமா செய்றவங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் எப்போ கிடைக்கும்னு கேட்டேன் ஓய்.
ரவி said…
thanks M.S.E.R.K....
//அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...//

சலூன் கடைல "சூப்பர்" படங்களாக வச்சிருப்பாங்களே, "அந்த" புக்ஸ் எல்லாம் கூட இருக்குமே..
அதைல்லாம் சொல்லமே வுட்டுட்டீங்க

Popular Posts