2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மறக்க முயன்று தோற்ற நிகழ்வு. சரியாக நினைவில்லை என்றால் சந்தோஷமே.
அப்போது ஒரு நாளைக்கு அரைபாக்கெட் கிங்ஸ் வாங்குவேன். ஆங். இப்போது விட்டாச்சு சிகரெட். ஒருவருடமாகிறது புகைத்து. மீண்டும் புகைக்க விருப்பமில்லை. மனைவிக்கு கொடுத்த உறுதிமொழி மூலம் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட பல முறை எடுத்த முயற்சிகள் தோல்விகளில் முடிந்ததை தனியாக எழுதவேண்டும்.
எங்கே விட்டேன் ? புகை. ஆம். அலுவலகம் வந்து பார்த்தால் சிகரெட் தீர்ந்துவிட்டிருந்தது. நான் தங்கியிருந்த பேச்சுலர் வீட்டில் ஒரே புகைவண்டிகள். காலையில் காபிக்கு பிறகு ஒரு சிகரெட் தேடினால் பாக்கெட் காலி.
டெவலப்மெண்டில் இருக்கும் விஜய ஷங்கர் சிங் வில்ஸ். இருந்தாலும் பரவாயில்லையே என்று அவனை தேடினால் அவன் ஒரு மீட்டிங்கில். மஹிபால் புகைக்கமாட்டான். இருந்தாலும் எப்போது கூப்பிட்டாலும் கம்பெனி தருவான். அவன் சீட்டில் அவனை ஆளை காணவில்லை.
இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாயிருக்கலாம் உங்களுக்கு. அப்படியிருந்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு உபயோகமானதை தேடி படிக்கவும். பெங்களூர் இன்னர் ரிங் ரோடு என்று உண்டு. டெல் பில்டிங், அதன் பிறகு ஏஎன்ஸட் அப்புறம் எல்ஜி, மைக்ரோசாப்ட், ஐபிஎம், டார்கெட். எதிர்புறம் சாஸ்கென். அப்போது டெல் பில்டிங் முன்புறம் பீப்புள் சாப்ட் அல்லது ஹனிவெல் இருந்தது என்று நினைக்கிறேன்.
சாலை அருகே, ஏதோ கன்ஸ்ட்ரக்ஷனும் நடந்துகொண்டிருந்தது. இப்போது புதிதாக வலது புறம், இல்லை இடது புறம். ம்ஹும். கோரமங்களாவில் இருந்து வரும்போது இடதுபுறம், டொம்ளூர் பாலம் வழியாக வந்தால் வலதுபுறம். அதன் முன் ஹுண்டாய் ஷோரும். அங்கே மூன்று புறமும் தட்டி, அப்புறம் நடுவில் ஒரு டேபிளுடன் சிகரெட் விற்பார்கள்.
சாஸ்கெனில் இருந்து நடந்துவந்தேன். இதற்கெல்லாமா பைக் எடுப்பார்கள் ? வெய்யில் கொஞ்சம் அதிகம். பதினோரு மணி வெய்யிலில் புகை பிடிக்க எரிச்சலாகத்தான் இருக்கும். சிகரெட் வாங்கிக்கொண்டு ஹுண்டாய் ஊழியர்கள் வழக்கமாக பைக் நிறுத்தும் இடத்தில் இருக்கும் பெஞ்ச் போவதாக ப்ளான். நின்று கொண்டோ அல்லது வெய்யிலிலோ புகைப்பது பிடிக்காது. எங்காவது உட்கார்ந்துகொள்ளவேண்டும்..
______________ XXXX _______________
2008 ஆம் ஆண்டு. கார்த்திக் அம்மா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவரது இளையமகன் செந்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக. தொலைபேசி எண் கேட்டிருந்தார்கள் கொடுத்தேன்..
கார்த்திக் அம்மாவின் கணவர் 2000 ஆம் ஆண்டு லுகேமியா அல்லது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் பெருகி பெருகி உயிரை உருக்கிவிடும் நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு வந்ததே, அதே நோய்.
குணப்படுத்தவே முடியாதாமே ? அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்திருந்தார்களாம். மேட்டூரில் வேலை பார்த்தவர் என்றும் சொன்னார்கள். கார்த்திக் அம்மாவின் தம்பி சேலத்தில் வழக்கறிஞர்.
______________ XXXX _______________
பொதுவாக இண்டர்மீடியட் ரிங் ரோட்டில் காலை மற்றும் மாலையில் மட்டுமே நல்ல ட்ராபிக் இருக்கும். அதன் பிறகு பதினோறு மணியில் இருந்து மதியம் மூன்று வரை ட்ராபிக் பெரிதாக இராது. அவ்வப்போது வரும் ஆட்டோக்கள் பைக்குகள். கால்செண்டர் ட்ராபிக் துவங்கி விட்டால் பம்பர் டு பம்பர் ட்ராபிக் இருக்கும்.
அங்கே சிகரெட் கடையை தேடிப்போன எனக்கு அதிர்ச்சி. கடையை காணோம். சாலையின் இருமருங்கிலும் பார்த்தால், கடை கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் அளவுக்கு இண்டர்மீடியட் ரிங் ரோட்டின் பக்கம் நகர்ந்துவிட்டிருந்தது.
பெங்களூர் அளவுக்கு குழப்பமான ட்ராபிக் போலீஸை எங்கும் காணமுடியாது. ஏன் ஒன் வே வைக்கிறார்கள், ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியாது. அங்கே இண்டர்மீடியட் ரோட்டின் முதல் யூ டர்ண் எதிர்புறம் ஒரு விளம்பர போர்டு வைப்பதற்கான பணிகள் ஆரம்பித்திருந்தது. அதன் அருகே கடை. ஒன்று கடை புதிதாக இருக்கவேண்டும் அல்லது கடையை நகர்த்தியிருக்கவேண்டும்..
______________ XXXX _______________
கார்த்திக் அம்மாவிடம் பேசியபோது ஒரு விஷயம் தெரிந்தது. அவரது மகன் கார்த்திகேயன், பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைபதிந்துவந்ததும், அவர் விஜய நகரம் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருந்தது. அதன் பிறகு கார்த்திக் பற்றிய ஒரு அதிர்ச்சியான உண்மையை சொன்னார். கார்த்திக், பெங்களூரில் நடந்த ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்பது தான் அது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவில்லை, மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தது.
அதன் பிறகு அலுவலகத்தில் இருந்த தமிழ் பையன் பாலுவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். காரணம் பாலு ஒரு நல்ல லிஸனர். உங்களது பிரச்சினை எதுவாக இருந்தாலும் பாலுவிடம் சொல்லி ஆறுதல் தேடலாம். நாம் அழுதால் அவனும் அழும் மனது அவனுக்கு.
கொஞ்ச நாளில் அய்யோ முடியலை என்று F1 அழுத்தினான் பாலு. அவர்கள் ரொம்பவும் மனம் உடைந்துள்ளார்கள்டா. நீ சென்று பார்த்துவா என்றான். சென்னைக்கு டிக்கெட் புக் செய்தேன். வடபழனி தாண்டி, ஆலமரம் ஸ்டாப்பிங் தாண்டி ஆற்காட்டு ரோட்டில் நேராக போய் அவர்கள் வீட்டை கண்டுபிடித்தேன்.
சாப்பிடாமலேயே உயிர்வாழ்கிறார்கள் போல கண்ணில் உயிரை வைத்துக்கொண்டு, வீடெங்கும் கார்த்திக் படம், எப்போதும் கார்த்திக் புரணம். உங்கள் இளைய மகன் செந்திலையும் கவனியுங்க என்றால் அவர்களுக்கு புரியவில்லை. எப்போதும் கார்த்திக் கார்த்திக் என்று இழந்துவிட்டவரை நினைத்து அழவேண்டாம், இளைய மகனை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு என்று என்னால் ஆனவரை சொன்னேன்.
ரசம் சாதமும் ஏதோ ஒரு பொரியல், நினைவில்லை. சாப்பிட்டேன். கணிபொறியை திறந்து கார்த்திக் வலைப்பதிவு, கார்த்திக் பைக், என்றெல்லாம் காட்டிக்கொண்டுவந்தபோது கார்த்திக்கின் ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அவன் இவனா ? அப்போது தான் கார்த்திக் இறந்த தேதியை கேட்டேன். ஆகஸ்ட் 26. என்னுடைய கைகள் லேசாக உதற ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் மேலோட்டமாக வழமைபோல பேசிக்கொண்டிருந்துவிட்டு உடல் நலனை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு, கிளம்பினேன்.
______________ XXXX _______________
சிகரெட் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் ஆங்காங்கே க்ரீஸ். அல்லது கருப்பு திரவம். ஒழுங்காக வண்டியை பராமரிக்கமாட்டானுங்க இந்த கால்செண்டர் டிரைவருங்க. எங்கயாவது போய் இடிப்பானுங்க. ஒருமுறை நானும் என்னுடைய அப்பாவும் மஹிப்பால் ஆஸ்பிட்டல் எதிரே பைக்கில் விழுந்தோம். அல்லது எனக்கு முன்னால் போனவர் விழுந்ததால் ப்ரேக் போடமுயன்று நானும் அப்பாவும் விழுந்தோம். எனக்கு காலில் நல்ல அடி. அப்பாவுக்கு எதுவுமில்லை. அது நியாபகம் வந்து எரிச்சல்.
ஏற்கனவே கடையில் ரெண்டு பேர் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தார்கள், டெல் எதிரே ஒரு பெண் சாலையை கடந்துகொண்டிருந்தாள். சிவப்பு சுரிதார். துப்பட்டா இல்லை. வெண்ணிற கார் ஒன்றும், அதை தொடர்ந்து இரண்டு மூன்று வாகனங்கள் கடந்துசென்றுகொண்டிருந்தது.கடையை சமீபித்து சில்லறையை கொடுத்து சிகரெட் வாங்கினேன். தீப்பெட்டி பாக்கெட்டிலேயே இருந்தது. பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்தேன். சுமாரான ட்ராபிக் இருந்தது. திரும்ப போக எத்தனித்தேன்.
டமார் என்று ஒரு சத்தம். "அம்மா" என்று சத்தம் கேட்டது. சாலையின் சென்றுகொண்டிருந்த ஒருவர் எகிறிவிட்டார். க்ரீஸ் ஆக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பாக ஓட்டினாலும் க்ரீஸ் தன்னுடைய வேலையை காட்டிவிடுகிறது. நானும் இரண்டு மூன்று பேரும் ஓடினோம். சில வாகனங்கள் ஜாக்கிரதையாக கடந்து சென்றன, கொஞ்சம் தள்ளி ரெண்டு மூன்று பேர் நிறுத்தினார்கள், சமீபித்து பார்த்தேன், சின்ன பையன். பள்ளிக்கூடத்து பையன் போல இருந்தான். தமிழன் போலிருக்கிறது. வலிக்கும்போது அம்மா என்று கத்துபவன் வேறு யாராயிருக்கமுடியும். உதறிக்கொண்டிருந்தான். அவன் விழுந்திருந்த இடத்தில் கற்கள். எங்கேயும் ரத்தத்தை பார்க்கமுடியவில்லை.
சிகரெட்டை அனிச்சை செயலாக எறிந்துவிட்டு ஓடிவந்திருக்கிறேன். கற்களின் மேல் கிடக்கிறானே என்று பேண்ட் அழுக்காகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டே தரையில் அமர்த்து மடியில் எடுத்து போட்டேன். நீலு நீலு என்று யாரோ கத்தினார்கள். தெலுங்கா கன்னடமா ? சாலையை கடந்துகொண்டிருந்த பெண்ணும் வந்துவிட்டார். அவர் தன்னுடைய பையில் இருந்து தன்னுடைய பாட்டிலை எடுத்தார். ஏழெட்டு வாகனங்கள் நின்றுவிட்டன. நிமிடத்தில் நிறையபேர் வந்துவிட்டார்கள்.
பையன் மடியில் இருந்தான், அவனுக்குத்தான் ஆக்ஸிடெண்டா என்பது போல கண்கள் மிக சாந்தமாக இருந்தது. ஏதோ பேச முயன்றான். அம்மா என்று சொல்ல முயல்கிறான் போல தெரிந்தது. தண்ணீர் கொடுக்க முயன்றபோது தண்ணீர் வழிந்து என்னுடைய பேண்டில் ஊற்றியது. ஹனிவெல் டேக் போட்ட ஒருவர், அவரது ஐடி பாக்கெட்டில் இருந்தது, ஹாஸ்பிட்டல் கொண்டுபோகலாம் என்றார்.
கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலா, மஹிப்பாலா என்று யாரோ சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள், ஹீ ஈஸ் எ டெல் எம்ப்ளாயீ என்று யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். மாநிறத்துக்கு கொஞ்சம் கம்மியான பையன். என்னுடைய கைகளை இறுகப்பிடித்தான், பிறகு திடீரென தளர்துவிட்டது. முப்பது வினாடிகளில் ஒருமுறை அதிர்ந்து அடங்கினான். பையனை யாரோ தூக்கினார்கள், ஆட்டோவில் கொண்டுபோனார்களா அல்லது காரிலா என்று தெரியவில்லை. எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. பையன் என்னுடைய மடியில் கிடக்கும்போது இரண்டு வினாடிகள் ஒரு திடீர் சிலிர்ப்பு என்னுடைய உடலில் வந்து ஆட்கொண்டது. அதன் பின் பையன் கண்கள் மூடின. உயிர் பிரிந்துவிட்டதோ என்ற சந்தேகம். எங்கேயும் ரத்தம் வரவில்லையே ? கூட்டம் கலைய ஆரம்பித்தது, ட்ராபிக் போலீஸ் வந்தார்கள், பைக் ஓரமாக கிடத்தப்பட்டது.
ஹீ வாஸ் ஹோல்டிங் தட் பர்ஸன், என்று ஒரு ஹிந்திக்காரன்
டூ யூ நோ ஹிம் ?
நோ. ஹூ டேக்கன் ஹிம் ? ஆக்சுவல்லி ஐ காட் கிட்டினெஸ்.
ஐ திங்க் ஹீ வில் பி ஆல்ரைட். தேர் ஈஸ் நோ ப்ளட். ஹீ மே வேக் அப் இன் த ஹாஸ்பிட்டல். கேர் பார் எ ஸ்மோக் ? என்னுடன் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தவர்.
நோ ஐ ஹாவ்.
ஹுண்டாய் ஷோரூம் நோக்கி நடந்தேன், ஏன் என்று தெரியவில்லை, உடல் சூடாகிவிட்டிருந்தது. ரெண்டு சிகரெட் தொடர்ந்து புகைத்தேன். வழக்கமாக விஜய் ஷங்கர் சிங் அப்படி புகைக்கும்போது கன்னாபின்னாவென திட்டுவேன்.
விஜய் மொபைலில் கூப்பிட்டான், ஹேய் டேமிட், வேர் ஆர் யூ ?
ஐயாம் இன் ஹுண்டாய் ஷோரும் மேன். ஐயம் நாட் பீலிங் வெல். கேன் யூ இன்பார்ம் என்.கே.ஜி ?
அடுத்தநாள் அலுவலகம் வந்தபோது, சற்றே கசங்கிய, டெல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த ஒரு பொக்கே ஒன்று இருந்தது. ரிசப்ஷனில் விசாரித்தேன். ஆக்சுவலி வீ ஹாட் ரிசீவ்ட் ப்ரம் ஹனிவெல் என்றார்கள். அந்த தம்பியை தூக்கிய ஹனிவெல் நன்பர் என்னுடைய ஐடி கார்டை பார்த்து எனக்கு பார்வெர்ட் செய்திருக்கக்கூடும்
அதன் பின் எனக்கு கிட்டத்தட்ட தினமும் ஒற்றைத்தலைவலி இருந்தது. உயிர் போவது போல விண் விண் என்று வலிக்கும். பகல் நேரத்தில். வேலை எதுவும் செய்யாமல் நாட் பீலிங் வெல் என்று ஆபீசில் உள்ள பெட் ரூம் போன்ற அமைப்பில் போய் படுத்துக்கொள்வேன். அப்ரைசல் கட். கம்பெனி மாற்றினேன். ஏதாவது ஆன்சைட் கிடைக்குமா என்று கேட்டு சிட்னி, ஆஸ்திரேலியாவில் போய் ஆறுமாதம் இருந்தேன். ஆஸ்திரேலியாவிலும் ஒற்றைத்தலைவலி தொடர்ந்தது. திரும்ப இந்தியா வந்து எல்.ஜியில் இண்டர்வியூ. ஹெச் ஆரிடம் கேட்டேன். வேர் ஈஸ் த ஆபீஸ் லொக்கேஷன் மேடம் ?
இட்ஸ் இன் இண்டர்மீடியட் ரிங் ரோட். டூ யூ நோ டெல் ?
______________ XXXX _______________
கார்த்திக் அம்மா, கார்த்திக்கின் வலைப்பதிவை தொடர்கிறார்கள். பொன்னியின் செல்வன் குழுமம் கூட இருக்கிறது என்று கேள்வி. விஜயநகரம் என்ற பெயரில் உள்ளது வலைப்பதிவு.
இந்த சம்பவத்துக்கு பிறகு உறவினர்கள் நன்பர்கள் என்று யார் சொல்வதையும் கேட்பதில்லை, தான் நினைப்பதை தான் செய்வேன் என்று பிடிவாதம். சேலத்தில் உள்ள தம்பியையும் அதிகம் தொடர்புகொள்வதில்லை என்று சொன்னார்கள். இரண்டாவது மகன் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுகிறேன், அவன் தன்னுடைய நன்பர்களுடன் இருந்துகொள்கிறான் என்றார்கள்.
கார்த்திக் கார்த்திக் என்று இறந்துவிட்டவரை நினைத்து பைத்தியம் போல் இருந்தால் எப்படி இரண்டாவது மகன் ஒட்டுவான் ?
______________ XXXX _______________

கார்த்திக்கின் வலைப்பதிவு மற்றும் சிந்தனையோட்டங்களை பின்னாளின் படித்தேன். பெரிய சிந்தனையாளன். தமிழ்ச்சூழல் இவனை இழந்துவிட்டது. மல்ட்டிப்புள் டேலண்டட். இவன் இங்கே இருக்கவேண்டியவனே இல்லை. எங்கோ இருக்கவேண்டியவன்.
அதனால் தான் போய்விட்டானோ ? இறப்புக்கு பின் உயிர் இங்கேயே இருக்குமா ? உடல் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டபின் உயிர் அமைதியடைகிறது. கணிப்பொறியை ஷட்டவுன் செய்தவுடன் அதன் இயக்கத்தை அது நிறுத்திக்கொள்வது போல. ஆனால் கணிப்பொறி அங்கேயேதான் இருக்கிறது. ம்ஹும். புரியவில்லை. பொதுவாக நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் அந்த உயிர் துடித்து வெளியேறியபோது என்னுடைய கைகள் சில்லிட்டு உடல் சிலிர்ப்படைந்ததே ? அதை விளக்கமுடியுமா ? உங்களில் யார் மடியிலாவது ஒரு உயிர் பிரிந்ததுண்டா ? அவன் அந்தம்மா மடியிலேயே போயிருக்கலாம். இருந்தாலும் கார்த்திக் அம்மாவின் மன உறுதி ? இரும்பு போல இருக்கிறது. கார்த்திக் கற்றுக்கொடுத்திருப்பான். அவன் செய்வான். அவன் இன்னும் இருப்பதாகவே அவர் நம்புகிறார். இருக்கலாம். அப்படி இருந்தால் அவனுக்கு பிறந்தநாள் கொண்டாடும்போது சொல்லிவிடவும். நான் வாழ்த்து அனுப்புகிறேன்...!!!
______________ XXXX _______________