மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளின் முதன்மையானது என்று கூறப்படுவது சக்கரம்...சக்கரத்தினை மனிதன் கண்டறிந்த பிறகு சமூகம், கலாச்சாரம் நாலுகால் பாய்ச்சலில் சென்றது...சக்கரத்தை கண்டறிந்தவர்கள் மெசபடோமியர்கள்...இவர்கள் 5000 நூற்றாண்டுகளுக்கு முன் ஈரான் - ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள்..மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு இடையில் என்று பொருள்..
ஆச்சர்யமாக இருக்கிறது...இந்த அறையை வாடகைக்கு எடுத்து இன்றோடு பத்து நாட்கள் வரை என்னுடைய அறையில் இவ்வளவு பெரிய பூச்சாடியும் அதில் உண்மையிலேயே வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய பெரிய இலைகளையுடைய செடியையும் கவனிக்காமலேயே இருந்திருக்கிறேன்...
இவ்வளவு பெரிய வீடு ஆயிரம் ரூபாய்க்கு...என்னுடைய பணி காரணமாக இந்த வீட்டை இரு வாரத்துக்கு மட்டும் வாடகைக்கு எடுத்திருக்கிறேன்...யார் ஹவுஸ் ஓனர், அவர் பெயர் என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்று எந்த விஷயமும் எனக்கு தெரியாது...ப்ரோக்கர் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டார்...நான் இரண்டு வாரங்களுக்கு அப்புறம் இடத்தை காலிசெய்துவிடுவேன் என்பதை...
அலுவலகம் முடிந்தால் வீடு, வீட்டில் உள்ள இந்த ஒரே அறை..படுக்கையில் உட்கார்ந்தபடி மடிக்கணினி...அதில் இணணயம்...வீட்டிலேயே மாடிக்கு ஹாலில் இருந்தே படிக்கட்டு, இதுவரை போய்கூட பார்க்கவில்லை...
இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும்...இவ்வளவு பெரிய ஹால் இருந்து இதுவரை நான் பார்த்ததில்லை...இதிலேயே நான்கு குடும்பங்கள் நடத்தலாம் போல அவ்வளவு பெரிய ஹால்...
**************************
சரி அப்படியே இன்றைக்கு இந்த வீட்டை கொஞ்சம் பார்த்துவிடலாம் என்று கொஞ்சம் சோம்பேறித்தனமாக எழுந்தேன்...அட இதென்ன, ஹால் ஓரத்தில் இவ்வளவு பெரிய பெட்டி...

பெட்டி என்றால் இதுவரை நான் பார்த்திராத அளவில் இவ்வளவு பெரிய பெட்டி...சாவி துவாரம்..பெட்டிக்குள்ளே பூட்டு அமைப்பு...
***************************
இடதுபுற அறை பூட்டிருந்தது, அதில் ஹவுஸ் ஓனரின் பொருட்கள் எல்லாம் இருக்கின்றன என்று ப்ரோக்கர் சொல்லியிருந்தார்..நாகரீகம் இல்லையென்றாலும், ஆர்வம் காரணமாக சாவித்துவாரம் வழியாக எட்டிப்பார்த்தேன்..

ஆச்சர்யத்தில் ஆ என்று வாயை பிளந்தேன்...அது கிட்டத்தட்ட ஒரு கெமிஸ்ட்ரி லேப் தோற்றத்தில் இருந்தது...என்னுடைய ஹால் தான் இந்த வீட்டில் பெரியது என்றால் அந்த ஹாலை விட இந்த கெமிஸ்ட்ரி லேப் ரூம் மிகவும் பெரியதாக தெரிந்தது...
*********************************
மீண்டும் பெட்டி....வருடம் 1702 என்று முகப்பில் பெரிய வெள்ளை எழுத்துக்களால் எழுதியிருந்தது..ஆயிரத்தி எழுநூறுன்னா ? ஒன்னு ரெண்டு மூனு..மூனு நூற்றாண்டுக்கு முந்தைய பெட்டியா ? கிட்டத்தட்ட முன்னூத்தி ஆறு வருஷம்...இதில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமானது...
நகர்த்திப்பார்த்தேன்...இம்மி அளவு கூட நகரவில்லை..இந்த பெட்டிய எப்படி மாடி வரை எடுத்துவந்தார்கள் ? அதுவும் இந்த சின்ன வாசல் கதவில் சத்தியமாக இந்த பெட்டி நுழையாது...இதே இடத்தில் வைத்து செய்தார்களா ?
சரி சாவி இல்லாமல் எப்படி திறக்கமுடியும்...என்று மீண்டும் படுக்கையில் போய் அமர்ந்தேன்...
*********************************
அதில் என்ன இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டேன்...முன்னூறு வருட பெட்டி...தங்கம் ? வைரம் ? பழைய பாக்தாத் போர்வைகள் ? பழைய அரசர் வாள் ? இல்லை பழைய டேப்ரிக்கார்டரும் சில தட்டுமுட்டு சாமான்களும் ?
அல்லது அரசாங்கத்துக்கு சொந்தமான பொருட்கள் ? அல்லது கட்ற்கொள்ளையின் போது கொள்ளையடித்தவை ?
தலைமுடியை பிய்த்துக்கொள்ளாத குறை !!!
***********************************
ஆங் அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்...இந்த அறையில் நான்கு ஓவியங்கள் இருக்கின்றன...
கேன்வாஸில் தீட்டப்பட்டு பிறகு கண்ணாடி ப்ரேம் போட்டதுபோல் இருக்கிறது...ஆனால் ஒரு ஓவியம் மட்டும் ஏதோ பெண் பெட்டியை திறப்பது போல...மற்றவை அம்புக்குறி கேள்விக்குறி மாதிரி சில ஓவியங்கள்...
ஒரு நிமிஷம்...அம்புக்குறி ? எதாவது குறியீடா ? அட...இதை எப்படி மறந்தேன்...
முதல் படத்தில் உள்ள அம்புக்குறி வலதுபுறம் பார்த்த ஒரு அம்புக்குறி ->
இரண்டாவது ஒரு கேள்விக்குறி ?
மூன்றாவது ஒரு தரையை பார்த்ததுபோன்ற ஒரு அம்புக்குறி...

நான்காவது ஒரு பெண் பெட்டியை திறப்பது போன்றது...
ஷிட்...!!! ஷிட்...!!!
இது எப்படி ஸ்ட்ரைக் ஆகாம போச்சு ? பெட்டிக்கு கீழே இருக்கலாம் சாவி...!!!!
ஓடிச்சென்று பெட்டிக்கடியில் கையை விட்டு துழாவினேன்...
டேமிட் !!!! கிடைச்சுருச்சு...

இவ்ளோ பெரிய சாவியா ? என்னுடைய முழங்கை நீளம்..!!! தாமதிக்காமல் விரைவாக சாவியை உள்ளீடு செய்தேன்...
*********************************
ஒரே நிமிடத்தில் என்னுடைய உற்சாகம் வடிந்துபோனது...திறக்க முடியவில்லை...என்னுடைய வலு அத்தனையும் கொடுத்து முயன்றேன்...ம்ஹும்...அசைந்து கொடுக்கவில்லை அந்த பூட்டு...
ஸ்வெட்டரை கழற்றினேன்...அதன் மூலம் சாவியை பிடித்தேன்...முழு வலுவையும் கொடுத்து சுழற்றினேன்...
க்ளப் !!! க்ரக் !!!! விர்ர்...
திறந்துவிட்டது...!!!
கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கொஞ்சம்கூட வடிந்துபோகாத உற்சாகத்துடன் மெல்ல திறந்தேன்...
பெட்டியில் நான் பார்த்த விஷயம்..
ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றேன்...
*************************************

உள்ளே ஒரு ஆள் அமர்வது போல சேர்..இடது புறம் ஏதோதோ பொத்தான்கள்...மோட்டர் போன்றதொரு விஷயம் வலதுபுறம்...ஆயில் கேன் போன்றதொரு அமைப்பு...ஆக்ஸிலேட்டர் போன்றதொரு அமைப்பு...சிறிய சிறிய எல்-இ-டி லைட்டுகள்...
அப்புறம் கால்குலேட்டர் மாதிரி ஏதோ ஒன்று இருக்கையில் கைப்பிடியில்..ஸ்பீடாமீட்டர் மாதிரி அமைப்பு முன்னால்...த டைம் மெஷின் - ஹெச்.ஜி.வெல்ஸ் என்ற ஆங்கில நாவலின் பதிப்பு ஒன்று கோக்குமாக்காக கிடந்தது...பழைய கார் ஸ்டீரிங் வீல் ஒன்று உட்காரும் சீட்டில் இருந்தது...
இது என்ன கால இயந்திரமா ? இந்த வீட்டு ஓனர் என்ன மாதிரியான ஆள் ? டைம் மெஷினை உருவாக்குகிறேன் என்று கிறுக்கு பிடித்து அலைந்தவனா ? இந்த இருக்கையில் உட்காரலாமா ? ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் மனதில்...
கால இயந்திரம் என்பது சாத்தியம் இல்லை...ஒரு பருப்பொருள் ஒரு காலத்தில் இருந்து இன்னோரு காலத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பது போன்ற விவாதங்களை ஸ்பீல்பெர்க்கின் டைம் ட்ராவல் ஹாலிவுட் படங்களை பார்த்து எனது நன்பர் குழாமுடன் செய்திருக்கிறேன்...
நான்கே நான்கு டைமென்ஷன்கள் தான் இந்த பூமியில்...எக்ஸ், ஒய் மற்றும் இஸட் ஆகிவை மற்றும் நான்காவதாக டைம்...என்று அறியப்பட்டுள்ளது...
எந்த இயந்திரமும் ஒரு காலத்தில் இருந்து மனிதனை அடுத்த காலத்துக்கு அழைத்துசெல்லமுடியாது..என்பது தான் உண்மை...டுபாக்கூர் ஹாலிவுட் காரய்ங்க எதாவது எடுப்பாய்ங்க...அதை ஆ என்று வாயை பிளந்து ரசித்துவிட்டு வேண்டுமானால் வரலாம் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருந்ததுண்டு...
சரி இதில் உட்கார்ந்துதான் பார்ப்போமே என்று அப்படியே உள்ளே வலதுகாலை வைத்து பின் இடது காலை உள்ளே வைத்து சேரில் அமர்ந்தேன்...
பெட்டி பட்டென மூடியது....சீட் பெட்ல்ட் ஒன்று தன்னிச்சையாக என் இடுப்பை இறுக்கியது...உள்ளே பல் வண்ண விளக்குகள் எரிந்தன...
நீங்கள் இனி காணப்போவது டைமென்ஷன் ஓ என்று முன்னால் இருந்த திரையில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மின்னின...
**************************************
இருக்கையின் கைப்பிடியில் இருந்த கால்குலேட்டர் வஸ்து திடீரென்று உயிர் பெற்றது...எதாவது டைப் செய்து தான் பார்க்கலாமே என்று 5 ஆம் எண்ணை அழுத்தினேன்...
"இப்போது நீங்கள் மெசபடோமியாவுக்கு செல்கிறீர்கள்"
என்று திரையில் எழுத்துக்கள் மின்னின...
என்னது மெசபடோமியாவா ? ஹி ஹி..எட்டாப்பு ஹிஸ்டிரி புக்கை எல்லாம் நியாபகப்படுத்தாதீங்கடே...எதாவது சினிமாவுக்கு டம்மி பீஸ் செய்திருப்பானோ ? ஆர்ட் டைரக்டரா இந்த ஆளு ? எல்.இ.டி டிஸ்ப்ளே எல்லாம் பக்காவா செய்திருக்கான்...மெசபடோமியாவாம் ஹா ஹா...
மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்
மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்
மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்
என்று உருப்போட்டு படித்தது நியாபகம் வந்தது...
லைட்டாக சிரித்துக்கொண்டே இருக்கையில் பெட்டி லைட்டாக இடப்புறத்தில் இருந்து வலப்புறம் நகர்வது போல தோன்றியது...
கொஞ்சம் கொஞ்சமாக நகர்வு அதிகரித்து சுழலத்தொடங்கியது......
ஊ ஊ ஊ ஊ என்று ஜெயண்ட் வீலில் பயணிப்பவன் போல வாயை பிளந்து நான் கத்தத்தொடங்கியபோது...மூர்ச்சையானேன்..
எவ்வளவு நேரம் சுழன்றது என்றும் நினைவில்லை...நான் கத்தி கத்தி ஓய்ந்துபோய் மயக்கம் வந்து உறங்கத்தொடங்கினேன்...
சுய நினைவு வந்தபோது சுழற்சி நின்றிருந்தது...
மெல்ல பெட்டியின் தலையை உயர்த்தினேன்...
நூற்றுக்கணக்கான ஈட்டிகள் கண்ணுக்கு வெகு அருகில் !!!!
சூழ்ந்து நின்றவர்கள் மெல்ல பெட்டியின் மூடியை முழுவதும் அகற்றினார்கள்...
என்னை பிடித்து வெளியே இழுத்தார்கள்...
டேய் என்னடா இது அவ்வைசண்முகி கமல் மீனா ஆஸ்ட்ரேலியா சாங்ல வர்ர காட்டுவாசி ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கிட்டு எத்தனை பேருடா ?
கிட்டத்தட்ட ஆயிரம் பேர்...
எல்லோர் கையிலும் ஈட்டிகள்...
அத்துனை முனைகளும் என்னையே குறி பார்த்தபடி...
ஈராக்கியர்கள் - குர்திஷ் மக்களை போல சிவந்து, மூக்கு பெரியதாக...
அய்யய்யோ, டைம் மெஷின் வேலை செய்திருச்சா ? இப்படி ஆப்பு வெக்குறமாதிரியாடா வேலை செய்யனும் ? கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் அப்படீங்கறமாதிரி...
எக்ஸ்கியூஸ் மீ...சாரி...அது வந்து...நான்...நான்....தமிழ்நாட்டுலருந்து...டைம் மெஷின் பெட்டி...
ஓ இவனுங்க ஹிந்தி பேசுவானுங்களா ? அரே முஜே மாப் கீஜியே...மே பெட்டி சே ஜா ரஹாஹூன்...
தரதரவென்று இழுத்துப்போகிறார்கள்...பெட்டியை பத்து பேர் சேர்ந்து தூக்கிவருகிறார்கள்...
கும்பலின் தலைவன் மாதிரி இருந்தவன் சொல்கிறான்...
"அனு அசுர் குரா உது...பாபிலோன் ஷமாஷ் நிதுனா..."
பெரிய கோட்டை ஒன்று பார்வைக்கு கிடைக்கிறது...

ஏராளமான ஆண்களும் பெண்களும் நிற்கிறார்கள்...ஏதோ வெளி கிரகத்து உயிரினமும் அதோட வாகனமும் வந்தமாதிரி ஏதோ கத்திக்கொண்டு என்னை இழுத்துக்கொண்டு போகிறார்கள்...
பெண்கள் அற்புதமான அழகிகள்...ரத்த பூமியிலும் இந்த கிளுகிளுப்பு போகமாட்டேங்குது பாரு என்று என்னை நானே கடிந்துகொள்கிறேன்...
எக்ஸ்கியூஸ் மீ...ஹல்லோ...நான் எதுவும் பண்ணமாட்டேன், கட்டை அவுத்து உடுங்கடா...ரொம்ப இறுக்குதுடா...ப்ளீஸ்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...
என்னை மண்டபத்தின் மையத்தில் நிற்கவைத்துவிட்டு அந்த மாபெரும் பிரமிடு போன்ற மண்டபம் அதிர எல்லோரும் கத்துகிறார்கள்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...
திடீரென இரண்டு பேர் வந்து சாம்பிராணி - நெருப்பை வைத்து புகை புகையாக எழுப்புகிறார்கள்...
நீண்ட வஸ்திரத்தை அணிந்த ஒருவன் - அய்யோ - ஏழடி இருப்பான் போலிருக்கு, தலையில் பெரும் கிரீடத்துடனும் கையில் இரும்பாலான ஏதோ ஒரு ஆயுதத்துடனும்...எல்லா முனைகளும் கூரான கிளாடியேட்டர் படத்தில் பார்த்தமாதிரி ஒரு ஆயுதம்...
இன்னைக்கு நம்ம கதை முடிஞ்சது...என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அவன் கூட்டத்தை நோக்கி கையை உயர்த்தினான்...
உருக்கியோ...உருக்கியோ...!!!
ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவில் சைலன்ஸ்...!!!!
என்னை கூர்மையாக பார்த்தான்...
டேய் சண்டை போடற உடம்பில்லைடா இது....எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜா ஆப் மெசபடோமியா ? நான் வந்து இங்க வந்தது எதுக்குன்னா...நான் நான் மிஸ்டேக்கா அஞ்சாம் நம்பர அழுத்தி...
அவன் அருகில் நின்றிருந்த ஒரு பெரியவர் அவனிடம் வந்து ஏதோ சொன்னார்...
என் கட்டுகளை அவிழ்த்துவிடச்சொல்லி கட்டளையிட்டான்...
தேங்யூ பெரியவரே என்று அவரை பார்த்து சொன்னேன்...பெரியவர் விழுங்கிவிடுவது போல முறைத்தார்...
இறுக்கமான கட்டுகள் தளர்ந்தததும் நான் மெல்ல திரும்பி பார்த்தது என்னுடைய சோ கால்டு டைம் மெஷின் பெட்டியை...
கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது...வீரர்களில் முக்கால்வாசிப்பேர் பிரமிடின் வெளியே நின்றுவிட்டார்கள்...
அரசன் பின்னால் பத்துபேர், மற்றவர்கள் அனைவரும் பத்துமீட்டர் தொலைவில்...
அப்படியே போய் ஜம்ப் பண்ணி பெட்டிக்குள்ள உட்கார்ந்து கதவை சாத்தி எதாவது நம்பர் அழுத்தினால் போதாதா...
வாசலை நோக்கி கையை உயர்த்தினேன்...குரலை உயர்த்தினேன்...
இங்க பாருங்க ராஜா...நான் இங்க உங்ககூட சண்டை போட வரலை...தெரியாத்தனமா இந்த பெட்டியில...
அவர்கள் கவனம் சில வினாடி திசைமாறியது...
அசுர வேகத்தில் பாய்ந்தேன்...
சடார் என பெட்டியை திறந்து உள்ளே இறங்கி சேரில் அமர்ந்து பெட்டியை மூட எத்தனித்தேன்...
அரசன் "ஹெதாலிக் ஹெர்மோ ஹசூனா ஹலாட்" என்று பயங்கரமாக கூவியபடி கையில் இருந்த ஆயுதத்தை வீசினான்...
அப்படியே பெட்டியை ம்ம்ஹும் என்னுடைய கழுத்தை நோக்கி அசுர வேகத்தில் வந்தது அந்த ஆயுதம்...
காலுக்கடியில் எடுத்து வைத்திருந்த ஸ்டீரிங் வீலை எடுத்து தடுத்தேன்...ஸ்டீரிங் வீல் பெட்டிக்கு வெளியே விழுந்தது...ஆயுதத்தின் ஒரு முனை என்னுடைய கட்டை விரலை பதம் பார்த்து அப்படியே கட்டை விரல் பிய்ந்து பெட்டிக்கு வெளியே விழுந்தது...பெட்டி மூடியது....விளக்குகள் எரிந்தன...
"திரும்ப வந்த இடத்துக்கே செல்க" என்று ஒரு பொத்தான் ஒளிர்ந்தது...
ஒரெ அமுக்கு அமுக்கினேன்...பிய்ந்த கட்டை விரலில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது...பெட்டி சுழல ஆரம்பித்தது...அப்படியே மயங்கினேன்...
****************************
அஞ்சலீ அஞ்சலீ புஷ்பாஞ்சலீ....!!!
மொபைல் ரிங் டோன் தூக்கத்தில் இருந்து எழுப்பியது.....
வணக்கம் ரவி...புத்தாண்டு வாழ்த்துக்கள்...நலமா இருக்கிறீயளே....
என்று ஈழ தமிழ் நன்பர்...ச்சே என்ன ஒரு கனவு ?
**************************
நலமாயிருக்கிறன் நன்பரே...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
என்ன ரவி பேச்சு சரியில்லை ? உறங்கமோ ? தொந்தரவு தந்துவிட்டேனோ ? அழகான இலங்கை தமிழில் தொந்தரவை கூட அழகாக செய்வார்கள் நமது நன்பர்கள்..
ஹி ஹி அதெல்லாம் ஒன்றுமில்லை...அட்லீஸ்ட் நீங்களாவது தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்கிறீர்களே ?
சரி நீங்க உறங்குங்கோ, பிறகு பேசுறன் என்று தொடர்பை துண்டிக்கிறார் நன்பர்...
சரி வணக்கம்...!!! என்றபடி தொலைபேசியினை துண்டிக்கும் எண்ட் பட்டனை அழுத்த முயலும்போது முடியவில்லை...
ஹும்...ஹும்...என்ன ஏன் அழுத்த முடியவில்லை ? கையை பார்க்கிறேன்...
என்னுடைய கட்டைவிரலை காணவில்லை !!!!!!!*******************************
*****************************
****************************
**************************